வாஷிங்டன்: உலகின் மிக முக்கியமான கட்சி பாஜக என்று அமெரிக்காவின் முன்னணி நாளிதழின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘வால் ஸ்டீரிட் ஜர்னல்’ நாளிதழ் செயல்படுகிறது. இந்தநாளிதழின் தலையங்க பகுதியில் கல்வியாளர் வால்டர் ரஸ்செல் மீட் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் தேசிய நலன்கள் குறித்த கண்ணோட்டத்தில், இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி உலகின் மிக முக்கியமான வெளிநாட்டு கட்சி ஆகும்.
2024-ல் பாஜக ஆட்சி: இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 2019-ம் ஆண்டில் 2-வது முறையாக ஆட்சி அமைத்தது. வரும் 2024-ம் ஆண்டில் அந்த கட்சியே 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நம்பகமான நட்பு நாடாக அந்த நாடு விளங்குகிறது. இப்போதைய சூழலில் இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவின் ஆதரவு இல்லாமல் சீனாவின் ஆதிக்கத்தை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியாது.
பெரும்பாலான வெளிநாட்டினருக்கு பாஜகவின் அரசியல், கலாச்சார வரலாறு குறித்து முழுமையாகத் தெரியவில்லை. அந்தக் கட்சியை புரிந்து கொள்வது அவசியம். 100 கோடிக்கும் அதிகமான மக்களை கொண்ட நாட்டை வழிநடத்தி இந்தியாவை உலகின் சக்திவாய்ந்த நாடாக மாற்ற முடியும் என்று பாஜக உறுதியாக நம்புகிறது.
இஸ்ரேலின் லிகுட் கட்சியைப்போன்று பாரம்பரிய சிந்தனைகளுடன் கூடிய பொருளாதார கொள்கைகளை அந்தக் கட்சி பின்பற்றுகிறது. மேற்கத்திய கலாச்சாரம், மேற்கத்திய அரசியலை ஆதரிப்போர் பாஜகவின் கொள்கைகளை கடுமையாக எதிர்க்கின்றனர்.
இதன் காரணமாக இடதுசாரி சிந்தனை கொண்ட அமெரிக்க விமர்சகர்கள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். இந்தியாவில் செய்தியாளர்கள், சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகின்றனர் என்று அவர்கள் ஆழ்ந்த கவலை தெரிவிக்கின்றனர். பாஜகவுடன் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இருக்கும் நெருங்கிய உறவு குறித்து அச்சப்படுகின்றனர்.
சீனாவின் வளர்ச்சியால் சர்வதேச அளவில் பதற்றம் எழுந்திருக்கிறது. இந்த சூழலில் பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் அமெரிக்கா நட்புறவைப் பேண வேண்டும். பொருளாதார, அரசியல் ரீதியாக இந்தியாவுடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் அவசியமாகும். இதற்கு இந்து தேசியவாத இயக்கத்தின் கொள்கைகளை அமெரிக்கர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.