வாஷிங்டன்,
உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு சேவை நிறுவனமான டிஸ்னி, பொழுதுபோக்கு சேவை துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் அடிப்படையில் செலவுகளை குறைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஏற்கனவே ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அமெரிக்க நிறுவனங்களின் வரிசையில் கடந்த மாதம் டிஸ்னி நிறுவனமும் இடம்பிடித்து இருந்தது. எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியாத காரணத்தால், தங்கள் ஊழியர்களில் 7 ஆயிரம் பேரை பணியை விட்டு நீக்க இருப்பதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்தது.
அதன்படி முதற்கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை பணியை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிஸ்னி நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தில் இருக்கும் மேலாளர்கள் பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.