கடந்த வாரம் `RRR’ படத்தின் `நாட்டு நாட்டு’ பாடல் 95வது ஆஸ்கர் விருதை வென்றது.
இந்தியா சார்பில் அஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்த்த ‘RRR’ திரைப்படம் தேர்வாகாமல் போனது. இதையடுத்து எப்படியாவது இப்படத்தை ஆஸ்கர் மேடையில் நிற்க வைக்க வேண்டும் என இயக்குநர் ராஜமெளலி மற்றும் ‘RRR’ படக்குழுவினர் விடாமுயற்சியுடன் உலகெங்கிலும் இருக்கும் பல முக்கிய இயக்குநர்களுக்கு ‘RRR’ படத்தைத் திரையிட்டுக் காண்பித்து வந்தனர்.
இந்த முயற்சிகளின் விளைவாக `RRR’ படத்தின் `நாட்டு நாட்டு’ பாடல் `கோல்டன் குளோப்’ மற்றும் 6வது ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் (Hollywood Critics Association) விருது வழங்கும் விழா இரண்டிலும் சிறந்த பாடலுக்கான விருதுகளை வென்றது.
அதேசமயம், இப்படத்தை ஆஸ்கர் விருதுகள் போட்டியில் இடம்பெறச் செய்ய ஓப்பன் கேட்டகரியில் ‘For your consideration (FYC)’ என்ற விளம்பர யுக்தி மூலம் திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நபர்களுக்கு ‘RRR’ திரைப்படத்தைத் தொடர்ந்து திரையிட்டுக் காட்டி வந்தார் ராஜமெளலி. மேலும், ஆஸ்கர் நாமினேஷனுக்காக ‘RRR’ திரைப்படத்தை மொத்தம் 15 பிரிவுகளிலும் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் ஆஸ்கரின் தேர்வுப் பட்டியலில் ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்த ‘RRR’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றது. பின்னர், இது ஆஸ்கர் விருதையும் வென்று சாதனைப் படைத்தது.
இதற்குப் பாராட்டுகள் குவிந்து வரும் அதேவேளையில் ‘RRR’ படத்தை ஆஸ்கரில் இடம்பெறச் செய்யவும், அமெரிக்காவில் இருக்கும் பல முக்கிய இயக்குநர்களுக்கு இப்படத்தைத் திரையிட்டுக் காண்பிக்கவும், விளம்பரங்களுக்காகவும் ரூ.80 கோடி வரை செலவழிக்கப்பட்டதாகத் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. இதற்கு விளக்கமளித்துப் பேசியுள்ளார் ‘RRR’ படத்தின் தயாரிப்பாளர் டி.வி.வி.தானய்யா.
இதுபற்றி பேசிய தானய்யா, “‘RRR’ படத்தை ஆஸ்கரில் இடம்பெறச் செய்யும் ஆஸ்கர் பிரசாரத்திற்காக (campaign) நிறையப் பணம் செலவழிக்கப்பட்டதாக நானும் கேள்விப்பட்டேன். உண்மையில் இதற்காக நான் எந்தப் பணத்தையும் செலவழிக்கவில்லை. அங்கு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு விருது விழாவிற்காக யாரும் 80 கோடி ரூபாய் செலவு செய்ய மாட்டார்கள். அதில் எந்த லாபமுமில்லை!” என்று கூறியுள்ளார்.