லக்னோ: உத்தர பிரதேச சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பிரசாத் குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் காஜியா பாத் முதல் காஜிப்பூர் வரை யாராவது குற்றச் செயல்களிலோ அல்லது சட்டத்துக்கு விரோதமாகவோ செயல்பட்டால் அதை உ.பி போலீஸ் பொறுத்துக் கொள்வதில்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ரவுடி கும்பலை ஒழிக்க மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிரபல ரவுடிகள் விஜய் மிஸ்ரா, சுசில் மூச், பதான் சிங் படூ, சுந்தர் பதி, சுனில் ரதி, துருவ் சிங், அனுபம் துபே உட்பட 64 ரவுடிகள் சட்டவிரோதமாக சம்பாதித்த ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.
இதே காலகட்டத்தில் முக்தர் அன்சாரியின் ரூ.523 கோடி மதிப்பிலான சொத்துகளும், அத்திக்அகமதுவின் ரூ.413 கோடி சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 64 ரவுடிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுக்கு எதிராகமேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மாதத்துக்கு இரு முறை டிஜிபி அலுவலகம் கண்காணித்து வருகிறது.
நிலக்கரி தொழிலை சட்டவிரோதமாக நடத்தும் கும்பல்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு அவர்களின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இது தவிர 18 தாதாக்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் மீரட் மண்டலத்தின் உதம் சிங் மீது 70 வழக்குகளும், பக்பத் பகுதியைச் சேர்ந்த அனுஜ் பர்க்கா மீது 34 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
தண்டனை: ரவுடிகள் பலருக்கு உ.பி போலீஸார் நீதிமன்றங்கள் மூலம் தண்டனை பெற்று தந்துள்ளனர். முக்கிய தாதாக்களான விஜய் மிஸ்ரா மீது 83 வழக்குகளும், முக்தர் அன்சாரி மீது 61 வழக்குகளும் உள்ளன. இவர்கள் பல ஆண்டுகளாக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். ஆனால் முதல் முறையாக தண்டிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் இவர்கள் உட்பட 13 முக்கிய குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர்.