புதுடெல்லி: இந்தியாவில் 2014 முதல் 2022 வரையிலான 8 ஆண்டுகளில் 5,931 வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் இவற்றின் மூலம் ரூ.8,800 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில், கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித் துறை நடவடிக்கைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்திரி பதில் அளிக்கையில், “2014-15 நிதி ஆண்டு முதல் 2021-22 நிதி ஆண்டு வரையில் இந்தியா முழுமைக்குமாக 5,931 வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் ரூ.8,800 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கணக்கில் காட்டப்படாத ரூ.4,164 கோடி வெளிநாட்டுச் சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய விதிமீறல்கள் மீதான அபராதம் மற்றும் வரி வசூலாக மத்திய அரசுக்கு ரூ.2,476 கோடி கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
2019-20 நிதி ஆண்டு முதல் ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை என்று சமீபத்தில் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், ஏடிஎம்களில் ரூ.2,000 பயன்படுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு, அது தொடர்பாக வங்கிகளுக்கு இதுவரையில் எந்த அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு பதில் அளித்தது.