ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், டெல்லி, காஷ்மீர், உத்தரபிரதேசம் ராஜஸ்தானிலும் உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் குவிந்தனர்.
நில அதிர்வு தொடர்பாக முகநூலில் பதிவிட்டிருக்கும் எம்.பி ரவிக்குமார், “டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு சுமார் 10.30 மணியிருக்கும். நான் படுக்கையில் அமர்ந்து மொபைலில் டைப் செய்து கொண்டிருந்தேன். அப்போது கட்டில் கிடுகிடுவென நடுங்குவதை உணர்ந்தேன். இன்று மாலையிலிருந்தே கொஞ்சம் டென்ஷனாக இருந்தது. அதனால் ரத்த அழுத்தம் அதிகமாகித் தான் அப்படித் தோன்றுகிறதோ என்ற சந்தேகத்தில் உடனடியாக ஸ்மார்ட் வாட்சை எடுத்துக் கையில் அணிந்து எனது இதயத்துடிப்பை பரிசோதித்தேன். அது பயப்படும்படியாக இல்லை. அந்த நொடியிலேயே நான் உணர்ந்தது நிலநடுக்கம் தான் என்பதைப் புரிந்து கொண்டேன். கால்களைத் தரையில் ஊன்றிப் பார்த்தேன். தலை சுற்றுவது போல் இருந்தது. மீண்டும் கட்டிலில் அமர்ந்து கொண்டேன். கட்டில் திரும்பவும் நடுங்கியது. இது நிலநடுக்கம் தான் என்று மனம் உறுதிப்படுத்தியது. நிலநடுக்கம் குறித்த செய்திகள் எதுவும் வெளியாகியிருக்கிறதா என்று ட்விட்டரில் தேடிப் பார்த்தேன். ஒன்றும் இல்லை. நான் நிலநடுக்கத்தை உணர்ந்த தகவலை ட்விட்டரில் பதிவு செய்தேன்.” என்றார்.
மேலும், “நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் தொல்.திருமாவளவன் அவர்கள் வேறு சில நண்பர்களோடு கடைவீதிக்குப் போயிருந்தார். அதன் பின்னர் தொலைபேசியில் அவருக்குத் தகவல் சொல்லப்பட்டது. அதைக் கேட்டு விட்டு உடனடியாக அவர் வீடு திரும்பினார். வீடு திரும்பியதும் அவரிடம் எனது அனுபவத்தைச் சொன்னேன். அதற்குள் தொலைக்காட்சி சேனல்களில் நிலநடுக்கம் குறித்த செய்திகள் வரிசையாக ஒளிபரப்பாகத் தொடங்கி இருந்தன. ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் நடிகை குஷ்பு, டெல்லி முழுவதும் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், மின்விசிறிகளும், விளக்குகளும் அசைந்ததாகவும் அதனால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
டெல்லி மக்கள், “இரவில் நில நடுக்கத்தை உணர்ந்த போது, தூக்கத்தில் இருந்து விழித்து சாலைக்கு ஓடி வந்தோம். அப்போது சாலையில் மக்கள் குவிந்து இருந்தார்கள்” என்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா மட்டுமன்றி, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் , கிர்கிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது. பாகிஸ்தானில் இதுவரை இந்த நிலநடுக்கம் காரணமாக 2 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானிலும் சிலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.