கோவில்பட்டி: கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், கல்குவாரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் அய்யனார் ஊத்து கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் எம். சண்முகையா தலைமை வகித்தார். கூட்டத்தில், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) சையத் மகபூப் லால், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 16 தீர்மானங்கள் வைக்கப்பட்டன. அப்போது கிராம மக்கள் கனிம வளம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு தொழிலும் அய்யனார் ஊத்து எல்லைக்குள் வரக்கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் கிராம மக்கள் திரண்டு கல்குவாரி அமைக்கக் கூடாது என கோஷங்கள் முழங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கிராம மக்கள் கூறுகையில், ”அய்யனார் ஊத்து ஊராட்சி பகுதியில் கல்குவாரி அமைக்க முயற்சிகள் நடப்பதாக நாங்கள் அறிகிறோம். எனவே அதனைத் தடுக்கும் பொருட்டு கடந்த கிராம சபை கூட்டத்தின் போது கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அப்போதும் எங்கள் கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்படவில்லை. தற்போது நடைபெறும் கூட்டத்திலும் எங்கள் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்ற அதிகாரிகள் தயங்குகின்றனர்” என்றனர்.
அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சுமார் 3.15 மணி நேரத்துக்கு பின்னர் 17ஆவது தீர்மானமாக கனிம வளத்தையும் சுற்றுச்சூழலையும் மற்றும் பொதுமக்களையும் பாதிக்கும் எந்த ஒரு தொழிலும் அய்யனார் ஊத்து எல்லையில் வரக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கிராம மக்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கூட்டம் நிறைவு பெற்றது. இதையொட்டி கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல், துறையூர் ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.