காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களில் 7 பேரின் பெயர் – விவரங்கள் தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் அருகே வளத்தோட்டம் பகுதியில் நரேன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் சுமார் 50 பேர் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை வழக்கம்போல், பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தது. இந்தப் பணியின்போது 25 பேர் அந்தப் பட்டாசு ஆலைக்குள் இருந்துள்ளனர். இந்த பட்டாசு ஆலையில், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள், இறப்பு போன்ற துக்க நிகழ்ச்சிகளுக்கான பட்டாசுகளும், வான வேடிக்கைகள் நடத்துவதற்கான வெடிகளும் தயாரித்து வந்துள்ளனர்.
புதன்கிழமை நண்பகல் 12 மணி அளவில் பணியில் இருந்தபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறியுள்ளது. இதில், இந்தப் பகுதியில் இயங்கி வந்த ஐந்து கட்டிடங்களில் நான்கு கட்டிடங்கள் சுக்கு நூறாக நொறுங்கி தரைமட்டமாகியுள்ளன. ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே எஞ்சி உள்ளது. இந்த விபத்தில் கட்டிடங்களில் வேலை செய்து கொண்டிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் சம்பவ இடத்தில் நான்கு பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலை தீ விபத்தில் படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கஜேந்திரன் (50) 90 சதவீதம், சசிகலா (45) 100 சதவீதம், ஜெகதீசன் (35) 95சதவீதம், ரவி (40) 90 சதவீதம், உண்ணாமலை (48) 40 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இதில் சசிகலா (வயது 45 ) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த சிலரது அடையாளங்கள் இன்னும் காணப்படாமல் உள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு: தீ விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காவல் துறை கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். முன்னதாக, விபத்து நடந்த பகுதிக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், தீ விபத்துக்குள்ளான கட்டிடங்களில் தீயை அணைத்தனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர் விவரங்கள்: சசிகலா, தேவி, விஜயா, கஜேந்திரன், சுதர்சன்,பூபதி, முருகன் ஆகிய 7 பேரின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளது. உயிரிழந்துள்ள மற்ற இருவரது பெயர் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை தெரியவில்லை.