கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, கோர்ட்டில் சரணடைந்த மாமனாரை கஸ்டடி எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி அருகேயுள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும், கிருஷ்ணகிரி அவதானப்பட்டி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சரண்யாவும் (21) காதலித்து வந்தனர். இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறி ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இதனால் சரண்யாவின் குடும்பத்தினர் ஜெகன்-சரண்யாவுடன் பேச்சுவார்த்தையை தவிர்த்து வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து வேலைக்காக டூ வீலரில், தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் டேம் ரோடு மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோடு பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் ஜெகனை கீழே தள்ளி, தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஜெகன் துடிதுடித்து இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்ததும் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் சாவகாசமாக 2 டூவீலர்களில் அங்கிருந்து சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவத்தை அந்த பகுதியில் இருந்த சிலர் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்தனர். அது சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சரண்யாவின் தந்தையான சங்கரை (45) போலீசார் தேடி வந்த நிலையில் அவர் நேற்று மாலை கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது வாக்குமூலமாக கூறியதாவது: எனது மகள் சரண்யாவின் காதலை நான் ஏற்கவில்லை. அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவு செய்து அதற்காக மாப்பிள்ளை பார்த்தேன். இந்நிலையில் எனது மகள் ஜெகனுடன் சென்று திருமணம் செய்து கொண்டாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் எனது மகளை என்னிடம் இருந்து பிரித்த ஜெகனை கொலை செய்ய திட்டமிட்டு உறவினர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்து விட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட ஜெகனின் தந்தை சின்னபையன் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், எனது மகனை கொன்ற சங்கர், உறவினர்கள் அருள், திம்மராயன், கோவிந்தராஜ், உடந்தையாக இருந்த மருமகளின் தாய் ரத்னா, தம்பி சந்தோஷ், சோமார்பேட்டை பிரியதர்ஷினி ஆகிய 7 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட ஜெகனின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டுள்ளனர். மேலும் இன்று உகாதி பண்டிகையையொட்டி நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் நாளை சங்கரை கஸ்டடி எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளனர். தொடர்ந்து மற்ற கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.