பியோங்யாங்:வட கொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் நிலையில், அதிபர் கிம் ஜாங் உன் மகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது, அந்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு ஆசிய நாடான, வடகொரிய் அதிபராக பதவி வகிப்பவர் கிம் ஜாங் உன், 39. தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் எந்தவிதமான தகவலும் கசிந்து விடாதபடி ரகசியம் காத்து வருகிறார்.
மேலும், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது நடத்தி வருகிறார்.
வடகொரியாவில், சில மாதங்களாக நிலவி வரும் கடும் உணவு பஞ்சத்தால் அந்நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சமீபத்தில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது.
இதை, தனது 10 வயது மகள் கிம் ஜூ ஏவுடன், அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்த்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்நிலையில், வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் நிலையில், அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது குடும்பத்தினர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது, அந்நாட்டு மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வட கொரியர்கள் கூறியதாவது:
உணவு பஞ்சத்தால், நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் ஒருவேளை கூட சாப்பிட முடிவதில்லை.
ஆனால், அதிபர் கிம் ஜாங் உன் மகள் கிம் ஜூ ஏ, நன்றாக சாப்பிடுகிறார். அவரது முகம், மிகவும் மென்மையானதாகவும், குண்டாகவும் இருக்கிறது. ஆனால் எங்களது குழந்தைகளின் முகம், எலும்பும் தோலுமாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்