சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை இலங்கை பெற்றுக்கொள்வதன் மூலம் நாட்டில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது – அமைச்சரவைப் பேச்சாளர்

நாட்டின் கடனை செலுத்துவது தொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. பிரான்சின் லசார்ட் நிறுவனம், கிளிபேர்ட் ஹான்ஸ் நிறுவனம், சர்வதேச நிபுணர்கள் மற்றும் இலங்கை நிபுணர்கள் இணைந்து கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரச நிதியை நிலைப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியங்களை உருவாக்கவும், அரச நிறுவனங்களை சீர்திருத்தவும், ஊழலுக்கு எதிராக போராடவும் இந்த நிதி வசதி வழங்கப்படுவதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

இதனூடாக கிடைக்கப்பெறும் நம்பிக்கையின் பிரகாரம், நாட்டில் இடை நிறுத்தப்பட்டுள்ள அனைத்து செயற் திட்டங்களுக்குமான கடன் வசதி கிடைக்க பெறும். இதன் மூலம் நாட்டின் அனைத்து செயற் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும். சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை பெற்றுக்கொள்வதன் மூலம் நாட்டில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றில் இருந்து இவ்வருட இறுதிக்குள் சுமார் 07 பில்லியன் டொலர்கள் நாட்டிற்கு வரவுள்ளதாக நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.