மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த பழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல், கூழையாறு, வானகிரி, தரங்கம்பாடி வரையிலான கடலோரப் பகுதிகளில் அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் முட்டையிடுவதற்காக இக்கடற்கரையோர பகுதிகளுக்கு வருவது வழக்கம்.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரையோரப் பகுதிகளில் தஞ்சமடையும் ஆமைகள் கடற் பரப்பு மற்றும் அருகிலுள்ள காப்புக்காடுகளில் மண்ணை நோண்டி முட்டைகளை இட்டு மீண்டும் கடலுக்குச் சென்றுவிடும்.
இவற்றை அப்பகுதியில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்து பாதுகாத்து வைப்பதற்காக வனத்துறையின் சார்பாக கூழையாறு, தொடுவாய், வானகிரி உள்ளிட்ட மூன்று இடங்களில் ஆமை குஞ்சுகள் பொரிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடலோரப் பகுதிகளில் வனத்துறையினர் மூலம் சேகரிக்கப்படும் முட்டைகள், அந்தந்த பகுதியில் உள்ள பொரிப்பகங்களில் பாதுகாக்கப்பட்டு 45 நாட்கள் முதல் 50 நாட்களுக்குப் பின்னர் வெளிவரும் ஆமைக்குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்படும்.
அதே போல் பொறிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்ட 1770 ஆமை குஞ்சுகள் வனத்துறை சார்பாக கூழையார் கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்றார். தொடர்ந்து அவரது முன்னிலையில் ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, வனச்சரகர் டேனியல் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆண்டு தற்போது வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் பொரிப்பகங்களில் வைத்து பொறிக்கப்பட்ட 19,000 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.