சென்னையின் ரேடியல் சாலையில் கிழிந்து தொங்கும் இராட்சத விளம்பர பேனரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை பள்ளிகரணை அடுத்த கீழ்கட்டளை ஏரிக்கு அருகில் ரேடியல் சாலையில் சட்டவிரோதமாக இராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 டன் எடை கொண்ட இரும்பின் மேல் பகுதியில் அனுமதியின்றி நீதிமன்ற உத்தரவை மீறி விளம்பரம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த விளம்பர பேனர் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.
இதனை காவல் துறையினரும், ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பதால், சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர். இதே ரேடியல் சாலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி சுபஸ்ரீ என்ற ஐடி பெண் ஊழியர் மீது கெட்சியினர் வைத்திருந்த விளம்பர பேனர் விழுந்து உயிரிழந்தார்.
இந்த நிலையில், தற்போது விளம்பர பேனர் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ரேடியல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது பேனர் விழுந்தால் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் உடனடியாக கிழிந்து தொங்கும் பேனரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM