சென்னையை அடுத்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தவர்
ராணி. இவருக்கு காவல்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட போலீஸ் ஜீப்பை ஓட்டுவதற்கு, போலீஸ் டிரைவரை பணியமர்த்தாமல் சொந்த செலவில் டிரைவர் ஒருவரை நியமித்திருந்தாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் விபத்து வழக்குகளிலும் இழப்பீடு தொகைகளில் தனக்குத் தெரிந்த வழக்கறிஞர்கள் மூலம் வழக்குகளை நடத்த வேண்டும் என புகார்தாரர்களை நிர்ப்பந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் புகாராக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்குச் சென்றன. அதன்பேரில் விசாரணை நடத்த துணை கமிஷனர் ஜோஸ் தங்கையாவுக்கு உத்தரவிட்டார் கமிஷனர் அமல்ராஜ்.
துணை கமிஷனரின் அறிக்கை அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ராணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. கடந்த ஏழு மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை கமிஷனர் அமல்ராஜிடம் சமர்பிக்கப்பட்டது. அதில் ராணிமீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராணியைப் பணிநீக்கம் செய்து தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இவரைத் தொடர்ந்து இன்னொரு பெண் இன்ஸ்பெக்டர்மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அவர்மீதும் அதிரடி நடவடிக்கை பாயும் என போலீஸ் கமிஷனர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.