தமிழகத்தில் ஆண்களின் ஊதியத்தில் 53% மட்டுமே பெண்களுக்கு வழங்குவதா சமநீதி? – அன்புமணி இராமதாஸ்!

ஆண்களின் ஊதியத்தில் 53% மட்டுமே மகளிருக்கு வழங்குவதா சமநீதி? அநீதியை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் ஆண் கூலித்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் (ரூ.556) 53% மட்டுமே பெண் கூலித்தொழிலாளர்களுக்கு (ரூ.297) வழங்கப்படுவதாகவும், நகர்ப்பகுதிகளில் 65% மட்டுமே (ரூ.576/375) வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது!

மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நடத்திய ஆய்வில்  இது தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் தான் அதிக கூலி வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்த மாநிலங்களில் தான் பெண்களின் உழைப்பு அதிகமாக சுரண்டப்படுகிறது. இது மன்னிக்கக்கூடாத அநீதி!

ஆண்களும், பெண்களும் ஒரே வேலையை, ஒரே கால அளவுக்கு செய்கின்றனர். ஆனால், ஆண்களின் கூலியில் கிட்டத்தட்ட பாதியை மட்டும் மகளிருக்கு வழங்குவது எந்த வகையில் நியாயம்? அதிலும் குறிப்பாக வளர்ந்த மாநிலங்கள் என்று போற்றப்படும் தமிழகத்திலும், கேரளத்திலும் இத்தகைய அநீதி தொடரலாமா?

சொத்துரிமை உள்ளிட்ட பல உரிமைகளை மகளிருக்கு முதன்முதலில் வழங்கிய மாநிலம் தமிழ்நாடு தான்.  அத்தகைய பெருமை கொண்ட மாநிலத்தில் பெண்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதும், அதை  அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் பெருமைக்குரியவை அல்ல!

ஆண்களுக்கு வழங்கப்படும் கூலியில் பெரும்பகுதி மதுக்கடைகள் மூலம் அரசுக்கு செல்லும். மகளிருக்கு வழங்கப்படும் கூலி தான்  குடும்பங்களைக் காக்கும். இந்த விவகாரத்தில்  தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.