திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ். செருப்பு கடை நடத்தி வரும் இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராங்கால் மூலமாக இளம் பெண் ஒருவர் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் அப்பாஸ்க்கு தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே அப்பாஸின் நண்பர்களான சுல்தான், அரபாத், ஜீவா உள்ளிட்ட மூன்று பேரும் திண்டுக்கல்லில் ஜவுளி எடுத்து வரலாம் என்று இருசக்கர வாகனத்தில் அப்பாஸை அழைத்து சென்றுள்ளார்கள். அப்போது வேடசந்தூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்.
அந்த நேரத்தில், திண்டுக்கல்லில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களுடன் அப்பாஸை அனுப்பி வைத்த அவரது நண்பர்கள், அப்பாஸை வத்தலகுண்டு அருகே வனப்பகுதியில் அழைத்து சென்று கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளார்கள்.
இதில், பலத்த காயம் அடைந்த அப்பாஸை அவரது நண்பர்கள் கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள், அப்பாஸின் தந்தையை வர வழைத்து ரூ. 1 லட்சம் பணத்தை வாங்கிய பின்னர் அப்பாஸை விடுவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பாஸிடம், அவரது உறவினர்கள் விசாரணை செய்ததில் அவர் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பாஸின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
அதன் படி, போலீசார் அப்பாஸ் நண்பர்களான சுல்தான், அரபாத், ஜீவா உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகிறார்கள்.