திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகங்களை சீரமைக்க வேண்டும் என கலெக்டரிடம் தலித் மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தலித் மக்கள் முன்னணி தலைவர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அதன் விவரம் வருமாறு, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் தேர்வை புறக்கணித்துள்ளார்கள்.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆகும். எனவே ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் படித்த மாணவர்களுக்கு தொடர்புடையவர்களையே பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக மற்றும் நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும். போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து சிகி்ச்சை அளிக்க வேண்டும். ஆதிதிராவிடர் விடுதி மற்றும் பள்ளிகளில் நீண்டகாலமாக பணிபுரியும் காப்பாளர் மற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்து ஒழுங்கு செய்ய வேண்டும். வகுப்பிற்கு ஒரு ஆசிரியர், பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.