உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தன் மனைவி அனுமதிக்கப்பட்டிருக்கும் நர்சிங் ஹோமில் கொசுத்தொல்லை அதிகம் இருப்பதால், ட்விட்டரில் போலீஸிடம் உதவி கேட்ட சம்பவம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இதற்காகவெல்லாம் போலீஸை அழைப்பார்களா என எண்ணத் தோன்றினாலும், மறுபக்கம் போலீஸ் செய்தது பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.
ராஜ் மொஹல்லா பகுதியில் வசிப்பவர் ஆசாத் கான். இதே பகுதியிலிருக்கும் ஹரி பிரகாஷ் நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரின் கர்ப்பிணி மனைவிக்கு நேற்று குழந்தை பிறந்திருக்கிறது. அதேசமயம் இந்த ஹோமில் கொசுத்தொல்லை அதிகமிருப்பதாக அவரின் மனைவி இவரிடம் கூறியிருக்கிறார்.
பின்னர் திடீரென ஆசாத் கான், ட்விட்டரில் உத்தரப்பிரதேச போலீஸைக் குறிப்பிட்டு, “சண்டௌசியிலுள்ள ஹரி பிரகாஷ் நர்சிங் ஹோமில் என் மனைவி ஒரு குட்டி தேவதையைப் பெற்றெடுத்திருக்கிறாள். அதோடு, வலியால் அவதிப்படும் என் மனைவியை, கொசுக்கள் அதிக அளவில் கடிக்கின்றன. எனவே, தயவுசெய்து எனக்கு உடனடியாக மோர்டீன் சுருளை வழங்கவும்” என ட்வீட் செய்திருக்கிறார்.
இது தெரிந்தவுடன் அடுத்த சில நிமிடங்களிலேயே, போலீஸ் தலைமையகத்திலிருந்து அறிவுறுத்தல்கள் வர, போலீஸார் உடனடியாக மோர்டீன் சுருளுடன் நர்சிங் ஹோமை வந்தடைந்தனர். பின்னர் இது குறித்து போலீஸுக்கு நன்றி தெரிவித்து ஊடகத்திடம் பேசிய ஆசாத் கான், “உத்தரப்பிரதேச போலீஸைத் தவிர வேறு யாரையும் உதவிக்கு அழைக்க என்னால் நினைக்க முடியவில்லை. என்னுடைய ட்வீட்டுக்குப் பிறகு, 15 நிமிடங்களில் மோர்டீன் சுருள் கிடைத்தது. இந்த உதவிக்காக உத்தரப்பிரதேச போலீஸாருக்கு என் நன்றிகள்” எனக் கூறினார் .