ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்படும் அளவிற்கு 90-களில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவும் நடிகையாகவும் விளங்கி வரும் நடிகை குஷ்பு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக விளங்கி வரும் திரைப்பட நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக அண்மையில் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நலடுக்கம் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.
இந்தியாவின் தலைநகர் டெல்லி, பஞ்சாப், காஷ்மீர், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லியில் வீட்டில் உள்ள சோபா, கட்டில் உள்ளிட்ட அதிர்ந்த நிலையில், பொருட்களும் கீழே விழுந்தன. பேன்களும் அசைந்தன.திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வேகமாக வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் நிலநடுக்கத்தை, தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட்டில், “டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்த பிறகு தெருக்களில் உள்ளோம். இங்கு என்சிஆர் முழுவதும் பலத்த நடுக்கம். சுனாமிக்குப் பிறகு இந்த நிலநடுக்க அனுபவம். இந்த நடுக்கம் சுமார் 4 நிமிடங்கள் நீடித்தது. வீட்டில் உள்ள மின்விசிறிகள் மற்றும் சரவிளக்குகள் அப்படியே நகர, சோஃபாக்கள் அலறுவது போல் இருந்தது, கீழே ஒரு அமைதியான ஜெனரேட்டர் போன்ற சத்தம் எங்களை வேகமாக வெளியேறச் சொல்ல, நாங்கள் வீட்டுக்கு வெளியில் வந்துவிட்டோம். அனைவரும் வீடு திரும்புங்கள், பாதுகாப்பாக இருங்கள் மற்றும் கவனித்துக் கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.