சென்னை: தமிழகத்தில் வரும் ஆண்டில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், ரூ.6,600 கோடியில் தடுப்பணை, பண்ணை குட்டைகள் உட்பட இயற்கைவள மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், வரும் ஆண்டில் ரூ.6,600 கோடி மதிப்பில் இயற்கைவள மேலாண்மைப் பணிகளான தடுப்பணை, பண்ணை குட்டைகள், கசிவுநீர்க் குட்டைகள், புதிய குளங்கள், கால்வாய்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகள், கல்வரப்பு, மண்வரப்பு, தனிநபர் கிணறு, சமுதாயக் கிணறு, பால் சேகரிப்பு மையம், உணவு தானியக் கிடங்கு, தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிட 19,400 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
விவசாய விளைபொருட்களை வயல்களில் இருந்து அருகில் உள்ள சந்தைக்கு கொண்டு செல்வதை மேம்படுத்தவும், வேளாண்மைக்கு இயந்திரங்களைக் கொண்டு செல்லவும், வரும் ஆண்டில் ரூ.710 கோடியில் கிராமங்களில் 2,750 கிமீ நீளத்துக்கு ஊரக சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் 2-ல் ரூ.368 கோடி மதிப்பில் கதிரடிக்கும் களம், சேமிப்புக்கிடங்கு, பால் சேகரிப்பு மையம், சிறுபாசனத் தொட்டிகள், குளங்கள், ஊருணிகள் புத்தாக்கம், புனரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
சிறுதானிய பயிர் சாகுபடி, மதிப்புக் கூட்டுதல், பயன்பாட்டை அதிகரிக்க சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் இடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் மூலம் 40 சிறுதானிய தொகுப்புகளுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மதி பூமாலை வளாகத்தில் சிறுதானியங்களின் மதிப்பு கூட்டு பொருட்களை விற்க சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைக்கப்படும். ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகளுக்காக ரூ.44 கோடி ஒதுக்கப்படும்.
தமிழகத்தில் தற்போது 23 லட்சம் இலவச மின்இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான கட்டணத் தொகை ரூ.6,536 கோடி நிதியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு அரசு வழங்கும்.
வாழை ஆராய்ச்சி நிலையம்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி விருதுநகர் உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களில் வாழை 22,000 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. வாழையின் பரப்பு தமிழகத்தில் அதிகரித்து வந்தாலும் அதன் உற்பத்தித் திறன் குறைந்து வருகிறது.
தென் மாவட்ட விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வாழை ரகங்களை சேகரித்து, உரிய ரகங்களைத் தேர்வு செய்து, பகுதிகேற்ற வாழை ரகங்களை உருவாக்கி அவற்றை விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதை உறுதி செய்யும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் வாழைக்கென ஒரு தனி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். இதற்கென ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும்.