மேகாலயா மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, அம்மாநில ஆளுநர் இந்தியில் உரையாற்றியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும்கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) 26 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசிய மக்கள் கட்சிக்கு பாஜக ஆதரவு அளித்தது. இதையடுத்து கான்ராட் சங்மா முதல்வராக பதவி ஏற்றார்.
இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அம்மாநில ஆளுநர் பாகு சவுகான் சட்டப்பேரவையில் இந்தியில் உரையாற்றி இருப்பதுதான் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம், மேகாலயா மாநிலத்தில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக உள்ளது. இதற்கு வாய்ஸ் ஆஃப் பீப்பிள்ஸ் (விபிபி) கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சபாநாயகர் தாமஸ் ஏ.சங்மா, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா ஆகியோர் தலையிட்டு ‘ஆளுநருக்கு ஆங்கிலம் படிப்பது சிரமம். அதனால்தான் அவர் இந்தியில் படிக்கிறார். சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆளுநர் உரை ஆங்கிலத்தில் வழங்கப்பட்டிருக்கிறது’ என விளக்கமளித்தனர்.
இதற்குப் பதிலளித்த வி.பி.பி. கட்சியைச் (எதிர்க்கட்சி) சேர்ந்த எம்எல்ஏ அர்டெண்ட் மில்லர், ”மேகாலயா மாநிலத்தின் காசி, காரோ மொழிகளை 8வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என நாங்கள் போராடி வருகிறோம். அஸ்ஸாமிய மொழித் திணிப்புக்கு எதிராகவும் போராடுகிறோம். அஸ்ஸாம் மொழித் திணிப்பில்தான் மேகாலயா தனி மாநிலமே உருவானது. இந்த நிலையில் எங்களுக்கு புரியாத மொழியில் ஆளுநர் உரையை வாசித்தால் எப்படி ஏற்க முடியும். மேகாலயா மாநிலம், இந்தி மொழி பேசுகிற மக்களைக் கொண்ட மாநிலம் அல்ல. இம்மாநிலத்தில் தனித்துவமான மொழிகள் பேசப்படுகின்றன. ஆகையால் எங்களுக்கு புரிந்த மாநில மொழிகளில்தான் ஆளுநர் உரையாற்ற வேண்டும்” என குரல் கொடுத்தார். வாய்ஸ் ஆஃப் பீப்பிள்ஸ் எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவு வழங்கினர்.
எனினும், சபாநாயகர், ஆளுநர் தொடர்ந்து இந்தியில் உரையாற்ற அனுமதி வழங்கினார். அதை கண்டித்து, அக்கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்கள், ”இந்தி பேசும் ஆளுநர்களை எங்கள் மாநிலத்துக்கு நியமிக்கக்கூடாது என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இந்தி பேசாத மாநில சட்டசபையில் ஓர் ஆளுநர் இந்தி மொழியில் பேசுகிறார். அது தங்களது மாநிலத்துக்கு அவமானம் என நினைக்க வேண்டும். அப்படியான தன்மான உணர்வு இருப்பதால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்” என்றனர்.
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேகாலயா ஆளுநர் சட்டப்பேரவையில் இந்தியில் உரையாற்றி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM