குஜராத்தில் புலம் பெயர் தொழிலாளிகளை சந்தேகத்தின் பேரில் அடித்து கொன்ற சம்பவம் ஒரே வாரத்தில் இரண்டு இடங்களில் நடந்துள்ளது.
குஜராத்தில் கேடா மாவட்டத்தின் மஹேமதாபாத் தாலுகாவில் உள்ள சுதவன்சோல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், மார்ச் 20ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை திருடன் என்ற சந்தேகத்தின் பேரில் சத்தீஸ்கரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியைக் அடித்து கொன்றதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர், சத்தீஸ்கரின் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் கெராவர். இவர் ஒரு வருடத்திற்கு முன்பு வேலைக்காக அகமதாபாத்திற்கு வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்த மணீஷ் குமார் சிங், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் கெராவரின் உடலை அடையாளம் காட்டினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது IPC 143, 147, 148, 149, 302, 114 ஆகிய பிரிவுகளின் மார்ச் 20 ஆம் தேதி மஹேம்தாபாத் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று கெடா மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வி.ஆர்.பாஜ்பாய் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற ஒரு சம்பவம் மார்ச் 19 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜீவன்புரா கிராமத்தில் நடந்துள்ளது. அங்கு 35 வயதான நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருடன் என்று சந்தேகித்து அடித்து கொன்றுள்ளனர். இந்த வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலைவாய்ப்பிற்காக தொழில் வசதி அதிகம் உள்ள மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களை நோக்கி வடக்கு, வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை புலம் பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர்.
மற்ற மாநிலங்களை விட அமைதியான சூழல் நிலவுவதால் தமிழ்நாட்டிற்கு வர புலம் பெயர் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பாஜகவைச் சேர்ந்தவர்கள் போலி வீடியோவை பரப்பி அசாதாரண நிலையை உருவாக்க முயற்சித்தனர். அதுமட்டுமல்லாமல் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த போலி வீடியோ விவகாரத்தை பீகார் சட்டமன்றத்தில் எழுப்பி தேசிய அளவில் தமிழ்நாட்டுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்தனர்.
ஆனால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கையில் இறங்கி போலி வீடியோவை வெளியிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது. தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர் என்பதையும் பிற மாநில அரசுகளுக்கும் தெரிவித்தது.
ஆனால் பாஜக ஆளும் குஜராத்தில் புலம் பெயர் தொழிலாளிகள் அடுத்தடுத்து தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் நிலையில் பிற மாநில பாஜக நிர்வாகிகள் மௌனம் சாதிப்பது ஏன் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.