சென்னை பல்லாவரம் அருகே பம்மல் பகுதியில், சிறுபான்மை மக்கள் நலக் கட்சியின் தலைமை அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து அவர் சீமான் பேசும்போது, ‘‘கிறிஸ்தவர்கள் என்னோடு இல்லை, நான்தான் உங்களோடு இருக்கிறேன். என்னை விட்டால் உங்களுக்கு நாதி இல்லை. கிறிஸ்து ஏசு புரட்சி செய்ய வந்தேன் என்றார். இப்போது உங்களுக்கோ புரட்சி என்றால் என்னவென்றே தெரியாது. கருணாநிதி ஒரு வாளி தண்ணீர், மற்றவர்கள் ஒரு வாளி என்று புரட்சி தீயை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டனர்.
ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி, பிஜேபியின் பி டீ என்றெல்லாம் என்னை அவதூறு செய்தார்கள். ஆனால் சிறுபான்மை மக்கள் நல கட்சித் தலைவர் சாம் ஏசுதாஸ் என்னை நம்பினார். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் பைபிளையும் குறானையும் ஊன்றி படிக்க வேண்டும். அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும்.
நீங்கள் சிறுபான்மை அல்ல, 13 கோடி இனத்தின் மக்கள். சிறுபான்மை என்று கூறுவதை ஏற்கக் கூடாது. நீங்கள் சிறுபான்மை என்றால் யார் பெரும்பான்மை? ஸ்டாலினா? உதயநிதியா? நேற்று இந்து, இன்று கிறிஸ்தவன், நாளை இஸ்லாமியன். மதம் மாறிக் கொள்ளக் கூடியது. ஆனால் நாம் தமிழர்கள். அது மாறாதது.
கட்சிப் பெயரை முதலில் மாற்றுங்கள், சிறுபான்மை என்ற சொல்லை அப்புறப்படுத்துங்கள். பார்த்தால் தொட்டால் நின்றால் தீட்டு என்றதால் கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டோம்.
ஒரே நாடு என்கிறீர்கள், ஒரே சுடுகாட்டை முதலில் கொண்டு வாருங்கள். கன்னடன், மலையாளி, தெலுங்கன் நம்மை ஆட்சி செய்து விட்டார்கள். இனி வட இந்தியன் ஆளப் போகிறான். நாம் என்ன செய்ய போகிறோம்?
பிஷப்புகள் தேவாலயங்களுக்கு செல்வதில்லை, கருணாநிதி வீட்டில் தான் குடியிருக்கிறார்கள். அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை, ஜமாத்துகளும் அப்படித் தான். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கருணாநிதி செய்த ஒரே ஒரு நன்மையை சொல்லுங்கள். எங்கள் வீட்டு பெண்களுக்கு உரிமை தொகைக்கான தகுதியை நிர்ணயிக்க நீ யார்? தேர்தல் வாக்குறுதியில் தகுதி என்ற வார்த்தையே இல்லையே ஏன்.?
பிடிஆர் பேசும் தமிழைக் கேட்டு தூங்கிவிட்டேன், ஒன்று தமிழில் பேசுங்கள், இல்லையேல் ஆங்கிலத்தில் பேசுங்கள். ஊழல், லஞ்சத்தில் சிக்காத ஒரு மனைவியுடன் வாழ்ந்த நெடுஞ்செழியனிடம் ஆட்சி போகாமல் எப்போது கருணாநிதியிடம் ஆட்சி போனதோ அன்றே நாம் தோற்றுவிட்டோம்.
முதலமைச்சராக உட்காந்திருக்க காரணம் நான். பிரசாந்த் கிஷோருக்கு கொடுத்த 400 கோடியை எனக்கு கொடுத்திருக்கலாம். 81 இடங்களில் என் வேட்பாளர்களால் நீங்கள் ஜெயித்தீர்கள். புள்ளிவிவரம் உள்ளது. மோடியையே தமிழ் பேச வைத்தவன் நான், என்னால் தான் மோடி அவ்வப்போது தமிழில் பேச முயன்று வருகிறார். அவர்கள் தமிழ் பேசினாலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொல்பவன் வெல்வான் என்றான் தலைவன். தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பதே கோட்பாடு. நாடாளுமன்றத் தேர்தலில் சென்னைக்கு 3 பெண் வேட்பாளர்கள் நாம் தமிழர் கட்சியில் தாயாராக உள்ளனர்’’ என அவர் பேசினார்.