2020ம் ஆண்டு மனித இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாத காலம். ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்து திணறிய வருடம். 2019–ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 2020-ல் பிற நாடுகளுக்கும் பரவியது.
ஊரடங்கு, தொற்றுநோய் பாதிப்பு, வேலையிழப்பு, மன அழுத்தம், கொரோனாவால் அன்புக்குரியவர்களை இழந்தது, நிதி நெருக்கடி என இந்த கொரோனா உலக மக்களின் வாழ்க்கைச் சக்கரத்தை நிறுத்தியது. கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸின் ஆதிக்கத்தால் பொதுமக்கள் ஆட்டிப்படைக்கப்பட்டனர்.
2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவிலும் கொரோனா பரவத் தொடங்கிய பிறகு மார்ச் 22-ம் தேதி தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வரலாற்றில் முதன்முறையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தினம் இன்று. இதன் பிறகே மக்களுக்கு கொரோனாவின் வீரியம் புரியத்தொடங்கியது. வீட்டை விட்டு வெளியேறத் தடை, மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுவது, வீட்டில் இருந்தே வேலை போன்ற புதிய கலாசாரங்கள் உருவாகின.
விமானம், பேருந்து என நாடு முழுவதும் முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வெளி மாநில மக்கள் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் நிலை உருவானது. வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. கல்வி நிலையங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மாஸ்க், சானிட்டைஸர், பாசிடிவ், லாக்டௌன், ஆன்லைன் கிளாஸ் போன்ற வார்த்தைகள் சரளமாகின. இவை அனைத்தோடும் இன்னும் பல்வேறு புதிய மாற்றங்கள் நிகழ்ந்தேறி மூன்று வருடங்கள் கடந்துவிட்டன.
இதே லாக்டௌனால் பலரது வாழ்வில் நல்ல விஷயமும் நடந்துள்ளதை மறுப்பதற்கில்லை. உண்மையான அன்பு, உறவுகளின் பிரிவு, அதனால் உருவான பாசம், நல்ல மனிதர்கள், சிலருக்கு புதிய தொழில்கள் என பல பாடங்களைக் கற்றுக்கொடுத்தது இந்த லாக்டௌன்.
இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தினத்தை ஒட்டி ட்விட்டர் வாசிகள் பலரும் லாக்டௌனில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான மற்றும் இனிமையான அனுபவங்களை #3YearsOfLockdown என்ற ஹேஷ்டாக்கில் பகிர்ந்து வருகின்றனர்.