நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகேயுள்ள வடகரையாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவர் மகன் வைத்தியநாதன் (50). இவர் மனைவி பூங்கொடி (40). இவரும், முன்னாள் வடகரையாத்தூர் ஊராட்சித் தலைவராகப் பதவி வகித்தவர். இந்த நிலையில், நேற்று வைத்தியநாதன் குடும்பத்தினருடன் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் அவரது வீட்டுக்குப் பின்பக்கமாக வந்த மர்மநபர்கள் படுக்கை அறை மற்றும் சமையல் அறை பகுதிகளில் தாங்கள் தயாராக வைத்திருந்த நான்கு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களில் தீயை வைத்து வீசியிருக்கின்றனர். இதனால் ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் தீப்பிடித்திருக்கிறது. அதோடு, ஜன்னலுக்கு அடியில் கட்டிவைத்திருந்த துணிகள் தீயில் நாசமாகின. நான்கு கண்ணாடி பாட்டில்களும் சுக்கு நூறாக சிதறி கீழே விழுந்திருக்கின்றன. இந்த பெட்ரோல் குண்டுவீச்சில் ஜன்னலை மூடியிருந்ததால், அதிர்ஷ்டவசமாக வைத்தியநாதனின் குடும்பத்தினர் உயிர்த் தப்பினர். இந்த நிலையில், தனது வீட்டில் பாட்டில் வீசப்படும் சத்தம் கேட்டு, வைத்தியநாதன் உடனடியாக வெளியில் ஓடி வந்து பார்த்தபோது, மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து, வைத்தியநாதன் எடப்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியிலிருந்த மாவட்ட எஸ்.பி கலைச்செல்வன், பரமத்தி வேலூர் டி.எஸ்.பி கலையரசன் மற்றும் போலீஸார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து, பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்களில் வைத்தியநாதன் வீட்டின்மீது பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற மர்ம நபர்களின் உருவங்கள் பதிந்திருக்கின்றனவா என்று ஆய்வு நடத்தினர். மர்மநபர்கள் குறித்து ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, வைத்தியநாதன் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்மநபர்கள் யார், அவர்கள் குண்டு வீசியதற்கான காரணம் என்னவென்று போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குண்டு வீச்சு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.