இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.
இதில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பத்து விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த இரண்டு அணிகளில் கோப்பையை வெல்ல போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த மைதானத்தில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுவதால் ஏராளமான ரசிகர்கள் தொடரை பார்ப்பதற்காக குவிந்துள்ளனர். அப்போது, ரசிகர்களில் கூட்டத்தைப்பார்த்து சிலர் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்றுள்ளனர்.
அதில், 12 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 29 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து கைது செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.