சென்னை: ரூ.640 கோடி மதிப்பிலான 56,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காயை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விளைபொருட்களின் அறுவடை காலத்தில், சந்தை வரத்து அதிகரிப்பதனால் ஏற்படும் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும்பொருட்டு, மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்கீழ் கடந்த 2 ஆண்டுகளில், ரூ.420 கோடி மதிப்பிலான 40,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் 33,500 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, வரும் கொள்முதல் பருவத்தில், ரூ.640 கோடி மதிப்பிலான 56,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காயை மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்துடன் இணைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.