டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு, இன்று பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டுள்ளன.
காலிஸ்தான் ஆதரவு அமைப்பு ‘வாரிஸ் பஞ்சாப் தே’
பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவராக உள்ளார். அவர்மீது 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், அவரை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
லண்டனில் இந்திய தேசியக்கொடியை அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்
கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மார்ச் 20ஆம் தேதி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் குவிந்த காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், லண்டன் இந்திய தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடியை அகற்றி காலிஸ்தான் கொடியைப் பறக்கவிட்டனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவிலுள்ள இங்கிலாந்து தூதரக உயரதிகாரியை அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது.
லண்டன் தூதரகத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்
இந்த நிலையில், இன்று (மார்ச் 22) டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மற்றும் தூதர் இல்லம் முன் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த பேரிகார்டுகள் (தடுப்பு வேலிகள்) அகற்றப்பட்டுள்ளன. லண்டனில் இந்திய தூதரகத்துக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இங்கிலாந்து தூதரகத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு இன்று குறைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே தூதரகம் மற்றும் தூதர் இல்லம் முன் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டுள்ளன.
அமெரிக்காவிலும் இந்திய தூதரகம் தாக்குதல்
இங்கிலாந்தைப்போல், அதே மார்ச் 20ஆம் தேதி, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்குள் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தூதரகத்துக்குள் கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்துக்கும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக பொறுப்பு அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை தனது அதிருப்தியை வெளியிட்டது. இதற்கிடையே இந்திய தூதரகம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப்பில் நடப்பது என்ன?
பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு முழக்கமும் அதிகரித்தது.
நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த பஞ்சாப் காவல் துறை, தலைமறைவாகியுள்ள அம்ரித்பால் சிங்கை கைது செய்ய முயன்று வருகிறது. அவர்மீது ஏற்கெனவே 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் அம்ரித்பால் சிங் எதிராக பிறப்பிக்கப்பட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்களிடம் உதவி கோரும் போலீஸ்
இந்த நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர்கள் 5 பேர் அசாமில் உள்ள திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், பல்வேறு தோற்றத்துடன் காணப்படும் அம்ரித்பால் சிங்கின் புகைப்படத்தை வெளியிட்டு கைது செய்ய போலீசாருக்கு உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, அம்ரித்பால் சிங் குருத்வாராவிற்குச் சென்று, அங்கு தனது ஆடைகளை மாற்றிக்கொண்டு 3 உதவியாளர்களுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றிருப்பதாகப் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்தே போலீஸ் தரப்பு பொதுமக்களிடம் உதவி கோரியிருப்பதாகக் கூறப்படுகிறது.
– ஜெ.பிரகாஷ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM