நம்மில் பலர் முக்கிய தினங்களைக் கொண்டாடும் போது, 4 மரங்களை நட்டு, உறுதிமொழி மட்டும் எடுத்தால் போதும், காடுகள் வந்து விடும் என எண்ணுகிறார்கள். உண்மையில் இந்த தினங்களைக் கொண்டாட வேண்டியதின் நோக்கம் வெறும் உறுதிமொழி எடுப்பதோ, விதைப் பந்துகள் வழங்குவதோ மட்டும் கிடையாது. அதற்கு முதலில் நாடுகளைப் பற்றியும், அதன் தற்போதைய நிலையைப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.
தற்போதைய புவிப்பரப்பின் மொத்த நிலப்பரப்பில் ஏறக்குறைய 30 சதவீதம் காடுகளால் ஆனது. ஆனால் முன்பு 50 சதவிகிதமாக இருந்தது, இப்போது 30-ஆகக் குறைந்திருக்கிறது. எனவே இதுபோன்ற காடுகளின் சிதைவைத் தடுக்கும் நோக்கிலும், காடுகள் அழிந்தால் உயிர்களுக்கு நேரவிருக்கும் பாதிப்புகள் குறித்து மனிதர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் உலக காடுகள் தினம் மார்ச்-21 அன்று ஐ.நா சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
மரங்கள் நிறைந்த அடர்ந்த பகுதி காடு. இதுதான் நமக்குச் சிறுவயதிலிருந்து கற்பிக்கப்பட்டது. ஆனால் மரங்களற்ற பகுதியும் காடு தான். அதன் நில அளவைப் பொறுத்தும், எதிர்காலத்தில் மரங்கள் வளர வாய்ப்புள்ள நிலப்பகுதியும் காடுகள் என்றே சொல்லப்படுகின்றன.
பூமியில் முதன் முதலில் உருவான காடு லேட் டேவோனியன் காடு. இது சுமார் 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான காடு எனச் சொல்லப் படுகிறது. இது முதலில் பூமியின் மையப்பரப்பான நிலநடுக்கோட்டுப் பகுதியில் தோன்றி அதன்பின் உலகின் பிற இடங்களுக்கு பரவியதாகச் சொல்லப்படுகிறது.
அந்த வகையில் உலகின் மிகப்பெரிய காடுகளின் வரிசையில் முதல் இடம் அமேசான் காடுகளுக்குத் தான். இதன் பரப்பளவு ஏறத்தாழ 5,500 ச.கிலோ.மீட்டர். இங்கு கிட்டத்தட்ட 16,000 வகையான தாவரங்களும், 2.5மில்லியன் பூச்சி இனங்களும், 2000-க்கும் அதிகமான பறவைகள் மற்றும் பாலூட்டி வகைகளும் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் காங்கோ காடுகளும், நியூகினியா காடுகளும், வால்டிவியன் காடுகளும், போர்னியோ காடுகளும் அதன் பரப்பளவைப் பொறுத்து முன்னிலை வகிக்கின்றது.
இந்தியாவின் மிகப்பெரிய காடு சுந்தரவனக் காடு. உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகளில் இதுவும் ஒன்று. இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளில் சுமார் 10,000 ச.கிலோ.மீட்டர் வரை பரவியுள்ளது.
தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பளவு 74 ச.கிலோ.மீட்டர். இதில் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டம் நீலகிரி. இதன் பரப்பளவு 8 ச.கி.மீ. காடுகளைப் பாதுகாப்பதற்கென்று வனதினம் இருப்பது போல் சட்டமும் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?
காடுகள் பாதுகாப்புச் சட்டம் அக்டோபர்-25 1980 அன்று கொண்டுவரப்பட்டது. காடுகள் என வரையறை செய்யப்பட்ட பகுதிகளில்,காடுகளுக்குத் தொடர்பில்லாத, அவசியமில்லாத பணிகளான, நெடுஞ்சாலை அமைப்பது, சுரங்கங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது போன்றவற்றிற்காக, காடுகளைத் தேவையின்றியோ, தேவைக்கும் அதிகமாகவோ அழிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதே இந்த காடுகள் பாதுகாப்பு சட்டம்.
காடுகளைக் கொண்டாடுவோம்…!
காடுகளில் உள்ள மரங்கள் காட்டுத்தீ போன்ற இயற்கையான நிகழ்வுகளைத் தவிர, பெரும்பாலும் மனிதர்களாலேயே அழிக்கப்படுகின்றன. உதாரணமாக ஏற்காடு, திருவாலங்காடு போன்ற காடு என முடியும் ஊர்கள் அனைத்தும் முன்பு காடாக இருந்தவையே. மனிதன் ஏற்படுத்திய அழிவால் தற்போது இங்கு காடழிந்து மனிதன் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
காடுகளின் பயனும், தேவையும் நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அதை மதிப்பெண்களுக்காகவும், மேடைப் பேச்சுக்காக மட்டுமே உபயோகிக்கிறோம் தவிர்த்து , நடைமுறையில் பின்பற்றத் தவறி விடுகிறோம். உண்மையாகவே காடுகளைக் கொண்டாடுவோம்..!