சண்டிகர்: பஞ்சாப் போலீஸாரால் தேடப்படும் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங், வாகனங்களை மாற்றியும், உடைகளை மாற்றியும் டோல்கேட்-ஐ கடந்து சென்றது அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.
பஞ்சாப்பில் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில் மீண்டும் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங்கை, பஞ்சாப் போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் கடந்த 4 நாட்களாக தேடி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் 120-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் அம்ரித்பால் சிங் மட்டும் போலீஸாரிடம் சிக்காமல் தப்பிவருகிறார்.
இந்நிலையில் ஜலந்தரில் உள்ள டோல்கேட் கேமராவில் கடந்த சனிக்கிழமை பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது, மெர்சிடஸ் எஸ்யூவி வாகனத்தில் முன் இருக்கையில் அம்ரித்பால் சிங் அமர்ந்துள்ளார். அதன்பின் அவர் மாருதி பிரஸ்ஸா வாகனத்தில் வேறு உடையில் இருக்கிறார். அதன்பின் பாரம்பரிய மத உடையை மாற்றிவிட்டு பேண்ட், சட்டை அணிந்து தலைப்பாகையை மாற்றி மோட்டார் பைக்கில் தப்பிச்சென்றதாக போலீஸார் தெரிவித் துள்ளனர்.
அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் முயற்சி தொடர்வதால், சட்டம் ஒழுங்கை பராமரிக்க செல்போன் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதை நேற்று மதியம் வரை பஞ்சாப் அரசு நீட்டித்தது.
முதல்வர் எச்சரிக்கை: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டுக்கு எதிராக செயல்பட எந்த அமைப்பையும் அனுமதிக்க மாட்டோம். அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து எந்த வன்முறை சம்பவமும் நடைபெறவில்லை’’ என்றார்.
சண்டிகரில் ஐ.ஜி சுக்ஜெயின் சிங் கில் அளித்த பேட்டியில், ‘‘அசாம் திப்ரூகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்ரித்சிங் பாலின் மாமா ஹர்ஜித் சிங் உட்பட 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் பஞ்சாப் போலீஸார் மற்றும் துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். மாநிலத்தில் முழு அமைதி நிலவுகிறது. இங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை’’ என்றார்.
அம்ரித்பால் சிங் இந்திய- நேபாள எல்லை அல்லது பஞ்சாப்பின் சர்வதேச எல்லையை கடந்து தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் சசாஸ்த்ரா சீமா பால் துணை ராணுவப்படையினர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அம்ரித்பால் சிங் தலைப்பாகையுடன் இருக்கும் போட்டோவும், தலைப்பாகை இல்லாமல் இருக்கும் போட்டோவும் அனுப்பப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் உள்ள பாதுகாப்பு படையினருக்கும் அம்ரித்பால் சிங் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80,000 போலீஸார் என்ன செய்தார்கள்?: ஆயுத கும்பலுடன் வலம் வரும் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் போலீஸார் கடந்த 4 நாட்களாக முயன்றும் பிடிக்க முடியவில்லை. இத்தகவலை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று தெரிவித்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘‘பஞ்சாப்பில் 80,000 போலீஸார் உள்ளனர். அவர்கள் என்ன செய்தார்கள்? அம்ரித்பால் சிங் எப்படி தப்பினார்? உளவுத்துறை தோல்விதான் இதற்கு காரணம்’’ என்று கூறினர்.