ஜேர்மனி கால்பந்து வீரர் மெசுட் ஓசில் 34 வயதில் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பிரேசில் உலகக்கோப்பை
2014ஆம் ஆண்டு பிரேசில் உலகக்கோப்பையை வென்ற ஜேர்மனி அணியில் முக்கிய பங்கு வகித்தவர் மெசுட் ஓசில்.
அந்த தொடரில் அல்ஜீரியா அணிக்கு எதிராக ஒரு கோல் அடித்த ஓசில், ஏனைய போட்டிகளில் சக அணி வீரர்கள் கோல் அடிக்க உதவி புரிந்தார்.
துருக்கியை பூர்வீகமாகக் கொண்ட ஓசில், ஜேர்மனி அணிக்காக 92 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார்.
@Getty Images
சர்வதேச போட்டிகளில் ஓய்வு
ஆனால், ரஷ்யா உலகக்கோப்பைக்கு பின்னர் எழுந்த இனவெறி சர்ச்சையால் ஜேர்மனி அணியில் நீடிக்க விரும்பவில்லை எனக்கூறி, 2018ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.
எனினும் ஆர்சனெல் கிளப் அணியில் தொடர்ந்து விளையாடிய ஓசில், 2022ஆம் ஆண்டு Fenerbahce அணிக்கு மாறினார். பின் அதே ஆண்டு இஸ்தான்புல் பஸாக்ஸேஹிர் அணிக்காக விளையாடினார்.
கால்பந்தில் இருந்து ஓய்வு
இந்த நிலையில் 34 வயதாகும் மெசுட் ஓசில் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அனைவருக்கும் வணக்கம், சிந்தனைமிக்க பரிசீலனைக்குப் பிறகு, தொழில்முறை கால்பந்தில் இருந்து எனது உடனடி ஓய்வை அறிவிக்கிறேன்.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக நான் ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக இருப்பதற்கான பாக்கியத்தைப் பெற்றுள்ளேன், மேலும் இந்த வாய்ப்பிற்காக நான் நம்பமுடியாத அளவிற்கு நன்றியுள்ளவனாக உணர்கிறேன்.
ஆனால், சமீபத்திய வாரங்கள் மற்றும் மாதங்களில் சில காயங்களுக்கு ஆளானதால், கால்பந்தின் பெரிய கட்டத்தை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது என்பது மேலும் மேலும் தெளிவாகிறது’ என தெரிவித்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணிக்காக 105 போட்டிகளில் 19 கோல்கள், ஆர்சனெல் அணிக்காக 184 போட்டிகளில் 33 கோல்கள் என மொத்தம் 73 கோல்கள் அடித்துள்ள ஓசில், சர்வதேச அளவில் 32 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@Kenan Asyali / POOL / AFP