வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் அழைப்பு

சென்னை: வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.

வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொள்ள வேண்டுமென கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதிய கடிதத்தை, கேரள மாநில மீன்வளம், பண்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சாஜி செரியன் இன்று (மார்ச் 22) நேரில் வழங்கி நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது,” சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கேரளத்தில் நடைபெற்ற மிக முக்கியமான போராட்டம் வைக்கம் போராட்டம் ஆகும். இங்குள்ள பிரசித்திப்பெற்ற மகாதேவர் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் அன்றைக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இக்கொடுமைகளுக்கு எதிராக 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் நாள் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் டி.கெ.மாதவன், கே.கேளப்பன், மன்னத்து பத்மநாபன், கே. பி. கேசவ மேனோன் போன்றோர் முன்னின்று செயல்பட்டனர்.

மகாத்மா காந்தி இப்பகுதிக்கு நேரடியாக வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும், மறுமலர்ச்சி நாயகர் தந்தைப் பெரியார் வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியதும் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இதன்காரணமாக, தந்தைப் பெரியார், வைக்கம் வீரர் என அறியப்பட்டதும், வைக்கத்தில் அவரது நினைவாக சிலை எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அமைதியான முறையில் 603 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வைக்கம் போராட்டம் 1925 நவம்பர் 23ம் நாள் வெற்றிகரமாக முடிவுற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை வரும் ஏப்ரல் திங்கள் ஒன்றாம் நாள் (01.04.2023) முதல் 603 நாட்கள் மிகச்சிறப்பாக கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது.

வைக்கம் போராட்ட வெற்றிக்கு தமிழகத்தின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதால், கேரள, தமிழ்நாடு மாநில முதல்வர்கள் இணைந்து வைக்கத்தில் உள்ள தந்தைப்பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தி , வைக்கம் போராட்ட வீரர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி, நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்திட வேண்டும்.” இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.