முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட இப்போதே காய்நகர்த்த தொடங்கிவிட்டார் என அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன. சமீபத்தில் அவர் டெல்லிக்கு தனியாகச் சென்று பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்த சமயத்திலும் சீட் கேட்டதாகச் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்மிடம் பேசியவர், “நடந்து முடிந்த மூன்று மாநிலத் தேர்தலில் கிடைத்ததைவிட மிகப்பெரிய வெற்றி 2024 தேர்தலில் பா.ஜ.க-வுக்குக் கிடைக்கும். பிரதமர் மோடியின் தேவையையும், பா.ஜ.க-வின் தேவையையும் மக்கள் உணர்ந்திருக்கிறாரகள். காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டுகள் ஊழல் நிறைந்தவை. மோடி ஆட்சியில் எல்லாமே தூய்மையாக இருக்கிறது. நாடும், அரசியலும் மோடி ஆட்சியில் தூய்மை அடைந்திருக்கின்றன. 2024 தேர்தலின் முத்திரை வாக்கியம் மோடி மட்டுமே. இனி வரக்கூடிய காலத்தில் எல்லாவகையிலும் மோடி என்ற முத்திரை வாக்கியம்தான் இடம்பெறும். ஈரோடு இடைத்தேர்தல் ஃபார்முலாவுக்கு ஈடாக இன்னொரு ஃபார்முலா கொண்டுவரமுடியுமா எனத் தெரியவில்லை. அந்த அளவுக்கு தி.மு.க இடைத்தேர்தலையே ஊழல் மிகுந்ததாக மாற்றிவிட்டது. எந்த எம்.எல்.ஏ, எந்த எம்.பி மண்டையைப் போடுவார் என எண்ணும் அளவுக்கு மக்கள் மனநிலையை தி.மு.க மாற்றிவிட்டது.
சிறுபான்மையினருக்கு எதிரானது பா.ஜ.க என்ற எண்ணம் மக்களிடம் மாறிவிட்டது. வடகிழக்கு மாநிலங்களில் சிறுபான்மையினர் அதிகமாக இருக்கிறார்கள். அங்கிருக்கும் மக்கள் பா.ஜ.க-வை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். உ.பி, குஜராத் மாநிலங்களில் இஸ்லாமிய சகோதரர்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கின்றனர். இந்த அரசு எல்லோருக்குமான அரசு. உலக அளவில் வல்லமை படைத்த நாடுகள் பிற நாடுகளில் அதிகாரத்தை புகுத்த நினைப்பது சரித்திரம். அதை இந்தியாவில் நிகழ்த்த வேண்டும் என நினைக்கிறார்கள். அது மோடி இருக்கும் வரை நம் நாட்டில் நடக்காது.
இந்திய அரசியலைப் பொறுத்தவரை எக்காலக்கட்டதிலும் எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நிற்கும் நிலை உருவாகுவது கடினம். காஷ்மீர் முன்னாள் முதல்வரின் மகன் உமர் அப்துல்லா, மம்தா, நிதிஷ் குமார், கெஜ்ரிவால் போன்றவர்கள்… அனைவரும் ஒன்றுசேர்வதை விரும்பமாட்டார்கள். தமிழ்நாட்டில் லாட்டரிச் சீட்டு, மதுக்கடைகளைக் கொண்டுவந்த பெருமை தி.மு.க-வையேச் சேரும். தமிழ்நாட்டில் டாஸ்மாக்கைத் தவிர்த்த சில போதைப்பொருள்கள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. அரசுக்குத் தெரியாமல் போதைப்பொருள்கள் விற்பனை நடக்க வாய்ப்பே இல்லை. தமிழக அரசு அபின் விற்பனை செய்யும் நிலைக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் எனக்கு இருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் செயல்படுகிறார். இதே மாவட்டத்தில் ராஜேந்திர பிரசாத் என்ற கிறிஸ்தவ மத அமைச்சர் இருந்தார். அவர் எல்லா கோயில்களுக்கும் சென்றார். பா.ஜ.க-வினருக்கு இருந்ததைவிட அவருக்கு மரியாதை அதிகமாக இருந்தது. அவருக்கு எந்த மதத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்படிப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மனோ தங்கராஜ் ஏன் இப்படிச் செயல்படுகிறார் எனத் தெரியவில்லை.
நான் எப்போதும் பிரதமர், அகில இந்திய தலைவர் ஆகியோரைச் சந்திப்பேன். சிலர் காரியத்துக்காக காலைப்பிடிப்பார்கள். நான் காரியத்துக்காக கால் பிடிப்பவன் கிடையாது. அப்படி கால் பிடிக்க பிரதமர் மோடி அனுமதிக்கவும் மாட்டார். இதற்கு முன்பு இருந்தவர்களும் கால்பிடிக்க அனுமதித்தது இல்லை. நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிட சீட் கேட்டது கிடையாது. எனக்கு சீட் தருவார்கள், நான் போட்டியிடுவேன். நான் மேலிடத்து தலைவர்களிடம் கோரிக்கை வைத்ததுகிடையாது” என்றார்.