நீலகிரியில் காட்டை இழந்து தவிக்கும் காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிகளை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. இது போன்ற நிகழ்வுகளால் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் பராமரிப்பில்லாத கிணற்றுக்குள் காட்டுமாடு ஒன்று விழுந்து தவிப்பதாக வனத்துறை மற்றும் குன்னூர் தீயணைப்பு வீரர்களுக்கு நேற்று அவசர அழைப்பு வந்திருக்கிறது. உடனடியாக விரைந்த வீரர்கள் காட்டுமாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கிணற்றுக்குள் சுமார் 40 அடி ஆழத்தில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த காட்டுமாட்டை பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் 10 மணி நேரத்துக்கும் மேலாக போராடி மீட்டனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “நீண்ட காலமாக பராமரிப்பில்லாமல் புதர் மண்டிக் கிடந்த கிணற்றுக்குள்ளிருந்து சத்தம் கேட்டிருக்கிறது. அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது காட்டுமாடு ஒன்று உள்ளே சிக்கித்தவிப்பதைக் கண்டு தகவல் தெரிவித்தனர்.
40 அடி ஆழத்தில் தவித்த காட்டுமாட்டை 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மீட்டோம். சுமார் 2 வயது மதிக்கத்தக்க அந்த பெண் காட்டுமாட்டை பத்திரமாக வனத்துக்குள் விடுவித்தோம். இந்த மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்களும் பங்காற்றினர்” என்றனர்.