புதுடெல்லி: ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை குறித்த கேள்வி, மக்களவையில் எழுந்தது. இதற்கு, உயர் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 61 தற்கொலைகள் நிகழ்ந்தன என்றும், 21 உயர் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி பிரிவுகள் இல்லை என்றும் மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்வியில், ”அண்மையில் மும்பை ஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மத்திய கல்வி நிறுவன வாரியாக எஸ்சி, எஸ்டி செல்கள் அமைக்கப்பட்ட விவரங்கள், ஐஐடி மும்பை மாணவர் நல மையத்தின் தலைமை ஆலோசகரே இட ஒதுக்கீடுக்கு எதிராக பகிரங்கமாக பேசினாரா? இப்படிப்பட்டவர்கள் இதுபோன்ற குழுக்களில் இருந்தால் எப்படி பட்டியல் சாதி, பழங்குடி மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்? பொருத்தமான நபர்களை இதுபோன்ற குழுக்களில் போட ஏற்பாடுகள் என்ன? இதுபோன்ற குழுக்களில் பட்டியல் சாதி பழங்குடி பிரதிநிதித்துவம் இருப்பதற்கு வழிகாட்டல்கள் ஏதேனும் உண்டா?” எனக் கேட்டிருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பியான சு.வெங்கடேசனின் இந்தக் கேள்விகளுக்கான பதிலாக மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்திருந்ததாவது: ”108 மத்திய கல்வி நிறுவனங்களில் 87-இல் எஸ்சி, எஸ்டி செல்கள் உள்ளன. ஐஐடி 19 (23), ஐஐஐடி 14 (25), ஐஐஎஸ்.இ.ஆர் 7 (7), ஐஐஎம் 20 (20), என்ஐடி 26 (32), ஐஐஎஸ்சி 1 (1) என்ற அளவில் இந்த செல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற நிறுவனங்களில் சமவாய்ப்பு செல், மாணவர் குறை தீர் செல், மாணவர் குறை தீர் குழு, மாணவர் சமூக மன்றம், குறை தீர் அலுவலர் ஆகிய ஏற்பாடுகள் உள்ளன.
கடந்த ஐந்தாண்டுகளில் ஐஐடி 33, என்ஐடி 24, ஐஐஎம் 4 என மொத்தம் 61 மாணவர் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. 2009-இல் ராகிங்குக்கு எதிராக, 2019-இல் மாணவர் குறை தீர்ப்பு குறித்து, 2023-இல் தேசிய தற்கொலை தடுப்பு வழிமுறைகள் ஆகியவை மீது பல்கலைக்கழக மானியக் குழு தொடர்ந்து பல சுற்றறிக்கைகளை விடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 எப்படி மாணவர் ஆலோசனை, உணர்வு சமநிலை, விளையாட்டு, கலாச்சாரம், சமூக சேவை, சூழலியல் ஆகியன மூலம் மாணவர்களின் உள வலிமையை மேம்படுத்த வழி சொல்லியுள்ளது.
ஐஐடி மும்பையில் இறந்த மாணவர் குடும்பத்திற்கு உரிய ஆதரவை அந்நிறுவனம் தந்து வருவதாகவும், உள் விசாரணை நடைபெற்று வருவதோடு, மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஒத்துழைப்பு நல்கி வருகிறது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்ட மாணவர் நல மைய தலைமை ஆலோசகர் நீக்கப்பட்டு பட்டியல் சாதி, பழங்குடி பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சு.வெங்கடேசன் எம்.பி. பேட்டி: இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: “அமைச்சரின் பதில் அதிர்ச்சியை தருகிறது. 61 தற்கொலைகள் என்பது ‘மன அழுத்தச் சூழல்’ மத்திய கல்வி நிறுவனங்களில் தொடர்வதையே காண்பிக்கிறது. இன்னும் 21 நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி செல்கள் இல்லை என்பது இவ்வளவு தற்கொலைகளில் இருந்து இந்த உயர்கல்வி நிறுவனங்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதும், அரசு தரப்பில் இருந்தும் கண்காணித்து உறுதி செய்யவில்லை என்பது தெளிவாகிறது. அதற்கு பதிலாக வேறு பெயர்களில் உள்ள பொதுவான குழுக்களை, புகார் முறைமைகளை கணக்கில் காண்பிக்க அமைச்சர் முயற்சிப்பது வேதனையானது.
தற்கொலைகள் நிகழ்வதற்காக காத்திருப்பது போன்று அந்த நிறுவனங்களும் அரசும் இருப்பது கண்டிக்கத்தக்கது. எஸ்சி, எஸ்டி செல் என்ற பெயரிலேயே அந்த செல்கள் இயங்க வேண்டும், அப்போதுதான் நம்பிக்கை பிறக்கும் என்ற சாதாரண புரிதல் கூட இல்லையா? இல்லை சனாதன அணுகுமுறையின் பிரதிபலிப்பா? என்ற கேள்விகள்தான் எழுகின்றன.
ஐஐடி மும்பை குறித்த பதில்கள் இவர்கள் சொல்கிற குழுக்களில் சாதிய உணர்வு கொண்டவர்கள் அமர்ந்து விடுகிறார்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினரின் பிரதிநிதித்துவம் இல்லாத நிலை இருக்கின்றன என்ற நிலைமையின் நிரூபணமே. பெரும் பொது வெளி எதிர்ப்பு எழுந்த பிறகே அந்த இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர் நீக்கப்பட்டார் என்பதும், எஸ்சி, எஸ்டி பிரதிநிதித்துவம் அவசர அவசரமாக நிரப்பப்பட்டதும் “பாதிப்பு கட்டுப்பாட்டு” நடவடிக்கையே” எனக் கருத்து கூறியுள்ளார்.