சென்னை InKo சென்டரில் ‘Art for Hope 2023’ என்ற கண்காட்சி நடைபெற்றது. இதில் இந்தியக் கலைஞர்கள் 21 பேர் ஒன்றிணைந்து நம் நாட்டின் பன்முகத்தன்மையை பல்வேறு வகையான கலை வடிவங்கள் மூலம் காட்சிப்படுத்தினர். ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெடின் சமூக சேவைப் பிரிவாகச் செயல்படும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் (HMIF), ‘Art for Hope’ எனும் 4-நாள் கண்காட்சியை (16 – 19 மார்ச் 2023) சென்னை InKo சென்டரில் நடத்தியது.
இதில் சென்னையைச் சேர்ந்த சிற்பி திரு. ராம்குமார் கண்ணதாசன், தன்னுடைய கலைப்படைப்புகளைக் காட்சிபடுத்தியிருந்தார். ‘கிடைத்த புதையலை மீண்டும் புதைக்கிறோம்’ என்ற தலைப்பில், பல்லாயிரக்கணக்கான உயிரினங்களின் புகலிடமான காட்டை அழித்து, அதில் மனிதன் வீடு கட்டுவதை சிற்பமாகச் செதுக்கி அதற்கு தேசிய விருதைப் பெற்றுள்ளார். இப்போது, ‘Art for Hope’ கண்காட்சியில், வீடில்லாத மனிதர் தெருவில் வசிப்பதைக் குறித்து இரண்டு சிற்பங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார். அதுபற்றி அவரிடம் விரிவாகப் பேசினேன்.
”சமீபத்தில், வள்ளுவர் கோட்டம் அருகில் ஒரு தெருவிலிருந்த குடிசைகளையும் வீடுகளையும் அதிகாரிகள் அப்புறப்படுத்திய போது, பல குடும்பங்கள் தங்கள் வீட்டை இழந்தனர். அப்போது, அங்கே வாழ்ந்த ஒருவர் தெருவில் படுத்திருந்ததைக் கண்டேன். 40 வருடங்களாக அங்கு வசித்துவந்தவர்கள், ஏதேதோ கனவுகளுடன் தங்கள் வீட்டை அங்கே உருவாக்கியிருப்பார்கள். அதையெல்லாம் திடீரென ஒரு நாள் பறிக்கும்போது அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும். தங்கள் குழந்தைகளைக் காக்க பாதுகாப்பான ஒரு வீடு இருக்கிறது என்ற நம்பிக்கையில் வாழ்ந்துவந்தவர்கள், இன்று எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வாழ்க்கையை மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவர்களின் இந்தத் துயரங்களை இரண்டு சிற்பங்களாகச் செதுக்கியுள்ளேன்.
எல்லாப் போராட்டத்திற்குப் பின்னும், நம்முடைய வேரைப் பிடுங்கியெடுத்த பின், ஒரு கையறு நிலையில் இருப்பதைத்தான் இந்த முதல் சிற்பம் விவரிக்கிறது.
இரண்டாவது சிற்பம், வீட்டை இழந்த ஒருவர், துணிந்து போராட உடலில் வலு இல்லாவிட்டாலும், படிப்பும் அறிவும் இருந்தால் சட்டத்திற்கு முன்னால் நின்று வெற்றிபெற முடியும் என்பதைச் சொல்கிறது” என்றார்.
இந்தக் கண்காட்சிக்குப் பின், சிற்பி ராம்குமார் கண்ணதாசன், மூன்று மாதப் பயிற்சிக்காக லண்டனுக்குச் செல்லவிருக்கிறார். ”நான் சிற்பக் கலையைக் கற்றுக்கொண்டபோது மாஸ்க் பயன்படுத்தியது கிடையாது. எந்தப் பாதுகாப்புக் கருவியும் உபயோகித்தது கிடையாது. ஆனால், சிற்பக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல, அதை முறையான பயிற்சிப் பாடமாக உருவாக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி என் பயணம் தொடரும்.
இளம் கலைஞர்களுக்கு இந்தக் கண்காட்சி மிகப்பெரிய ஒரு மேடையை அமைத்துக்கொடுத்துள்ளது. முதலில் டெல்லியில் நடந்த இந்த நிகழ்ச்சி இந்த முறை சென்னையிலும் நடந்துள்ளது. பல கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், அமைப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதனால், மேலும் பல கலைஞர்கள் இதில் பங்குபெற்றுப் பயன்பெற வேண்டும்” என்றார்.
அடுத்ததாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாரம்பரிய நிகழ்த்துகலைக் குழுவான ‘கட்டைக்கூத்து சங்கம்’ கலைஞர்களின் ‘கர்ண மோட்சம்’ கட்டைக்கூத்துப் புகைப்படங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இந்த நிகழ்ச்சியைப் பதிவு செய்தவர் பிரபல ஒளிப்படக் கலைஞர் Pee Vee (பெருமாள் வெங்கடேசன்). இந்தப் புகைப்பட ஆவணம், கண்காட்சியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
”கடந்த ஆண்டு, ஹூண்டாய் நிறுவனம் 25 கலைஞர்களுக்கு மானியம் கொடுத்து ஓராண்டுக் காலம் அவகாசமும் கொடுத்தது. ’மனிதகுலத்திற்கான முன்னேற்றம்’ எனும் நோக்கத்தில் அந்நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த ஆண்டு கலைஞர்களுக்கான மானியம் கட்டைக்கூத்து சங்கத்துடன் சேர்த்து எனக்கும் வழங்கப்பட்டது.
அதன்படி கட்டைக்கூத்துக் கலைஞர்களை வைத்து கர்ண மோட்சம் எனும் நிகழ்ச்சியைப் புகைப்பட ஆவணமாகவும், விடியோவாகவும் பதிவு செய்துள்ளேன்” என்றார் பெருமாள் வெங்கடேசன்.
கட்டைக்கூத்து நடிகர், இயக்குநர் மற்றும் நாடக ஆசிரியர் பெருங்கட்டூர் பொ. ராஜகோபால், நாடக அறிஞர் டாக்டர் ஹன்னே எம்.டி. புருயின், இவர்களுடன் 15 நடிகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் இணைந்து கட்டைக்கூத்து சங்கம் தொடங்கப்பட்டது. “கட்டைக்கூத்து கலையையும், அதை உயிருக்கு உயிராய் நேசிக்கும் கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி கௌரவிக்கும் நோக்கத்தில் எங்கள் அமைப்பு செயல்பட்டுவருகிறது. எங்கள் குருகுலத்தில் மாணவர்கள் தங்கி கல்வியுடன் கலையையும் கற்று வருகின்றனர்” என்கிறார், கட்டைக்கூத்து சங்கத்தின் நிர்வாக இயக்குநரும் கலை இயக்குநருமான பொ. ராஜகோபால்.
நாடக அறிஞர் டாக்டர் ஹன்னே, “கர்ண மோட்சம், கட்டைக்கூத்து நாடகத்தைப் புகைப்பட ஆவணமாக எடுத்ததுடன், அதை 12 தபால் அட்டைகளாகவும் வெளியிட்டுள்ளோம். இரவு முழுவதும் நடைபெறும் இந்த நாடகத்தில், இளம்பெண் கலைஞர்களை முன்னிலைப்படுத்த, சில மாற்றங்கள் செய்து மறுவுருவாக்கம் செய்திருக்கிறார் எங்கள் இயக்குநர்” என்றார்.