Doctor Vikatan: எப்போதும் தூக்கம்; படிகளில் ஏறி இறங்கினாலே மூச்சு வாங்குதல்; அனீமியாவின் அறிகுறிகளா?

Doctor Vikatan: கடந்த சில தினங்களாக பணியிடத்தில் தூக்கம், மாடிப்படிகளில் ஏறி இறங்கினாலே மூச்சு வாங்குவது, கவனச்சிதறல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகிறேன். இவையெல்லாம் அனீமியா எனப்படும் ரத்தச்சோகையின் அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறாள் என் தோழி. நான் மூன்று வேளையும் நன்றாகத் தான் சாப்பிடுகிறேன். பிறகு எப்படி ரத்தச்சோகை வரும்? இந்த அவதிகளுக்குத் தீர்வு என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்

ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன் | சென்னை

ஆற்றல் குறைவது, அதீத தூக்கம், சோம்பேறித்தனம், அளவுக்கதிகமாக முடி உதிர்வது, எதிலும் கவனம் செலுத்த முடியாதது, எளிமையான வேலைகளைச் செய்தாலோ, மாடிப்படிகளில் ஏறி, இறங்கினாலோ மூச்சு வாங்குவது, கண்களும் நகங்களும் வெளிறி இருப்பது, கூந்தல் மெலிவது என அனைத்துமே ரத்தச்சோகையின் அறிகுறிகளாக இருக்கலாம்.

வயது வாரியாக ஒவ்வொருவருக்கும் வேறு வேறு காரணங்களால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறையக்கூடும். எனவே முதல் வேலையாக மருத்துவரை அணுகி, உங்கள் ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து ஆலோசனை பெறுங்கள்.

மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ள நீங்கள், அந்த உணவுகளின் தரம் பற்றி குறிப்பிடவில்லை. உங்கள் உணவில் என்னவெல்லாம் இடம்பெறும் என்று குறிப்பிடவில்லை. உதாரணத்துக்கு சாதாரண தோசை சாப்பிடுவதற்கு பதில் அதில் முருங்கைக்கீரை, பசலைக்கீரை என ஏதேனும் ஒரு கீரை சேர்த்துச் சாப்பிடலாம்.

முட்டை, எலுமிச்சைப்பழ ஜூஸ் அல்லது நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடலாம். ஒவ்வொரு வேளை உணவிலும் புரதச்சத்தும், இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் இருக்கும்படி திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

புரதச்சத்து நிறைந்த உணவுகள்

முட்டை, பருப்பு, கெட்டியான சாம்பார், பருப்பு சேர்த்த தோசை, சன்னா- காய்கறி கூட்டு, கறுப்பு அரிசி, பருப்புடன் கீரை, நிறைய காய்கறிகள் சேர்த்த சிவப்பு அவல் உப்புமா, முட்டை சேர்த்த கட்டி ரோல், பனீர், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, எலும்பு சூப் போன்றவற்றை உங்கள் மெனுவில் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

என்ன சாப்பிட வேண்டும் என்பதைப் போலவே எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதும் அவசியம். அதாவது இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவதைத் தவிர்க்கும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். டீ, காபி, சோடா, ஏரியேட்டடு பானங்கள், சர்க்கரை சேர்த்த பானங்கள், ஆல்கஹால் போன்றவை அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

6 மாதங்களுக்கொரு முறை பூச்சி நீக்கும் மாத்திரைகளை மருத்துவ ஆலோசனையோடு எடுத்துக்கொள்ள வேண்டும். நகங்களை வெட்டி, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தோட்ட வேலை, ஜிம் வொர்க்அவுட் போன்றவற்றைச் செய்த உடன் கைகளை நன்றாக சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

உணவு இடைவேளைகளில் பசி எடுத்தால், தால் லட்டு, சீட்ஸ் சேர்த்த மிக்சர், உலர் பழங்கள் மற்றும் நட்ஸ், கடல்பாசி சேர்த்த ஸ்மூத்தி, காய்கறி சாலட், முளைகட்டிய தானிய சாலட், நெல்லிக்காய் ஜூஸ், கீரை சூப், சுண்டல் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

ரத்தசோகை

நன்றாகச் சாப்பிடுவது என்பது வேறு…. சரியாகச் சாப்பிடுவது என்பது வேறு… எனவே நீங்கள் சரிவிகித உணவுகளைச் சாப்பிடுகிறீர்களா, மேற்குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்களா என்று பார்த்து அதற்கேற்ப உங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு அனீமியாவை குணமாக்கும் சப்ளிமென்ட்டுகளை குறிப்பிட்ட காலத்துக்குப் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.