தமிழக பாஜகவில் அண்ணாமலை முன்வைத்த அதிமுக கூட்டணி தொடர்பான கருத்து உட்கட்சி பூசலுக்கு வித்திட்டது. கட்சியின் சீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அண்ணாமலை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அதன்பிறகு டெல்லியில் இருந்து வந்த எச்சரிக்கையால் சலசலப்பு அடங்கியது. கூட்டணி குறித்து கட்சி மேலிடம் உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று கூறிவிட்டார்.
அண்ணாமலைக்கு எதிர்ப்பு
இருப்பினும் அண்ணாமலைக்கு எதிராக ஒரு கூட்டம் வேலை செய்து வருகிறது என்றும், அவரை பதவியில் இருந்து நீக்க மும்முரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் திடீர் பயணமாக அண்ணாமலை இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் அமித் ஷா மற்றும் மூத்த தலைவர்கள் சந்தித்து தமிழக பாஜக தொண்டர்களின் விருப்பம் குறித்து எடுத்துரைக்க இருக்கிறார்.
அதிமுக கூட்டணி
தற்போதைய சூழலில் தமிழக பாஜகவில் இரண்டு விதமான நிலைப்பாட்டில் நிர்வாகிகள் இருக்கின்றனர். அண்ணாமலைக்கு ஆதரவாக இருப்பவர்கள் அதிமுக கூட்டணி வேண்டாம் என்கின்றனர். ஆனால் எதிர் கோஷ்டியினர் கூட்டணி வேண்டும். அப்போது தான் போதிய வாக்குகளையும், ஒருசில இடங்களையும் கைப்பற்ற முடியும் என வலியுறுத்துகின்றனர். இந்த விஷயத்தில் டெல்லி எடுக்கும் முடிவே இறுதியானது என்பதை மறந்துவிடக் கூடாது.
டெல்லி பயணம்
டெல்லி செல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அண்ணாமலை, தினமும் டிஜிபி, உளவுத்துறை அதிகாரிகளிடம் முதல்வர்
கேட்பது என்னவென்றால் நம்மை பற்றி யார் அவதூறாக பேசுகின்றனர்? என்பது தான். அவர்களை நள்ளிரவில் சென்று கைது செய்யுமாறு உத்தரவிடுவதை தான் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை
பெண்கள் மீது, குழந்தைகள் மீது யார் வன்மத்தை கக்குகிறார்களோ? அவர்கள் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வதற்கு தமிழக போலீசார் புலி மாதிரி இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பற்ற தன்மையை உணரும் முதல்வர்களுக்கு தான் சமூக வலைதள கருத்துகள் கூட முள் மாதிரி குத்தும்.
நிரூபித்து காட்டுங்கள்
2019 ஆண்டை ஒப்பிடுகையில் 2022 மிக மோசமான ஆண்டாக இருந்தது என்றார். அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டு கடனாளி ஆனதாக கூறியதற்கு எழுந்த விமர்சனங்கள் பற்றி கேட்டதற்கு, காவல்துறை சிறப்பு அதிகாரிகளை நியமித்து கர்நாடகாவில் நான் பணிபுரிந்த இடங்களுக்கு அனுப்புங்கள். என் ஊருக்கு அனுப்புங்கள். ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நிரூபிக்கட்டும். சம்பந்தப்பட்ட நபரை அழைத்து வந்து பிரஸ் மீட் நடத்தட்டும். நான் பதில் சொல்கிறேன். ஆட்சி அதிகாரமே அவர்கள் கையில் தான் இருக்கிறது.
பாஜகவின் வளர்ச்சி
ஒரு தனி நபரை எதிர்க்க இவ்வளவு பெரிய கூட்டமாக என வியப்பாக உள்ளது. இதன்மூலம் பாஜகவின் வளர்ச்சியை விரும்பவில்லை எனத் தெரிகிறது. அரசியலை பொறுத்தவரை யாரும் நண்பர்கள் இல்லை. எதிரிகள் இல்லை. எல்லோரும் அவரவர் கட்சியை வளர்க்கவே விரும்புவார்கள். அதனால் கூட்டணி கட்சி தலைவர்கள் என் மீது விமர்சனங்கள் வைத்தாலும் கூட வரவேற்கிறேன் என்று கூறினார்.