அதானி குழும முறைகேட்டைத் தொடர்ந்து விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் : ஹிண்டன்பெர்க் நிறுவனம் அதிரடி

வாஷிங்டன் : அதானி குழுமம் போலி நிறுவனங்களை நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹிண்டன்பெர்க் அம்பலப்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள் விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் கவுதம் அதானி போலி நிறுவனங்கள் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் கூறியது இந்தியாவில் புயலை கிளப்பியது. கரீபிய நாடுகள், மொரிஷியஸ் , ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்துவதாக கூறிய ஹிண்டன்பெர்க் நிறுவனம், இந்த போலி நிறுவனங்கள் வாயிலாக வரவு, செலவு கணக்குகளில் மோசடி செய்ததோடு வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது.

பங்குச் சந்தையில் துணிகர முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலம் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்த்தப்பட்டதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் குற்றம் சாட்டி இருந்தது. இதன் காரணமாக அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்ததுடன்  உலக பணக்காரர்கள் பட்டியலிலும் கவுதம் அதானிக்கு கடும் சரிவு ஏற்பட்டது. இந்த விவகாரத்தால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முடங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு விவகாரத்தை அம்பலப்படுத்தப் போவதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் யாரை பற்றிய விவகாரம், எப்போது வெளியாகும் போன்ற விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.