எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளியில் ஆசிரியரும், பெண் தலைமை ஆசிரியரும் தாக்கப்பட்ட சம்பவத்தால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையென கூறி பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர் பெற்றோர்கள்.
குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும், தலைமை ஆசிரியரையும், ஆசிரியரையும் தாக்கியவர்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, தங்களுடைய குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ளது கீழநம்பிபுரம் கிராமம். இங்கு அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 21 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். குருவம்மாள் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பாரத் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 21ஆம்தேதி அப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் பிரகதீஷ் என்ற மாணவரை ஆசிரியர் பாரத் அடித்துவிட்டதாக கூறி, மாணவரின் பெற்றோர் சிவலிங்கம், செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி ஆகிய 3 பேரும் பள்ளிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் குழந்தையை அடிக்கவில்லை என கூறிய நிலையில் ஆசிரியர் பாரத்தை தாக்கியது மட்டுமின்றி, ஓடஓட விரட்டி காலணியால் அடித்துள்ளனர்.
மேலும் இதனை தடுக்க சென்ற தலைமை ஆசிரியர் குருவம்மாளுக்கும் அடி உதை விழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவலிங்கம், செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர். செல்வி நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்ற 2 பேரும் சிறையில் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பேசியிருந்த தலைமை ஆசிரியர் குருவம்மாள், நன்றாக தான் பேசிக்கொண்டிருந்தார்கள், அப்போது யாரிடமோ இருந்து போன்கால் வந்தது. அந்த போன்காலில் பேசிய மர்ம நபரிடம் பேசிய பிறகு தான், எங்களை அவர்கள் தாக்கவும், சேர், பெஞ்ச்களை எடுத்து வீசவும் ஆரம்பித்தனர். ஆசிரியர் பாரத்தை காலணியால் தாக்கியது மட்டுமில்லாமல் அவருடைய மொபைல் போனையும் பிடிங்கி வைத்துள்ளனர். நாங்கள் அவர்களின் குழந்தையை தாக்கவே இல்லை, பால் குடித்துவர வீட்டிற்கு சென்ற மாணவனை காணவில்லை என நாங்கள் போன் செய்வதற்குள், அவர்கள் 2 காவலர்களை அழைத்து வந்து தங்கள் மகனை அடித்துவிட்டதாக பிரச்னையில் ஈடுபட்டனர். அவர்களுடைய வீட்டிற்கு செல்லும் போது நன்றாக இருந்த மாணவன், அவர்கள் அழைத்து வரும்போது கன்னங்களில் அடிக்கப்பட்ட தடயங்களுடன் காணப்பட்டான். நாங்கள் அந்த மாணவனை தாக்கவில்லை. இவர்களின் குடும்பம் கடந்த 3 மாதங்களாக ஏதாவது பிரச்னையை ஏற்படுத்திகொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் என்ன செய்துவிட்டோம், எங்களுக்கு ஏன் இதெல்லாம் நடந்தது. எங்களுக்கும், எங்களுடைய பள்ளியின் மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து தங்களுடைய குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், தாக்குதல் சம்பவம் நடத்தியவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கூறும் பெற்றோர்கள். அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற போது நாங்கள் எப்படி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் முடியும் என்று குற்றஞ்சாட்டி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர். மேலும் ஊர் மக்கள் அனைவரும் புறப்பட்டு 4 வேன்களில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கவும் சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் இப்பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.
மேலும் தெரிர்ந்துகொள்ள இங்கே படிக்கவும் :- மாணவனை அடித்ததாக கூறி ஆசிரியரை ஓடஓட விரட்டி காலணியால் அடித்த பெற்றோர்! நடந்தது என்ன?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM