ஆன்லைன் சூதாட்டத்துக்கு தேசிய அளவில் தடை சட்டம் கொண்டுவர அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசை வற்புறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியியது; ரம்மி உள்ளிட்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டின் காரணமாக பணத்தை இழந்து தமிழகத்தில் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் தங்களின் சேமிப்பு பணம், சொத்துக்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டின் பாதகமான விளைவுகளின் பின்னணியை ஆய்வு செய்யவும், அதனை ஒழுங்குபடுத்த ஆலோசனைகள் கோரியும் நீதியரசர் கே. சந்துரு தலைமையில் நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
அக்குழு விசாரித்து அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் இணைய வழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துதல் சட்ட முன்வடிவை ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆளுநர் சில சந்தேகங்களை கேட்டபோது, அரசின் தரப்பில் சட்டத்துறை அமைச்சர் நேரில் சென்று விளக்கமளித்தார். பல மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்து விட்டு 06.03.2023 அன்று ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பி வைத்தார். ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டினுடைய நிர்வாகிகள் ஆளுநரை நேரடியாக சந்தித்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ள பின்னணியில், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தார் என கருத வேண்டியுள்ளது.
ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட ஜனநாயக இயக்கங்களும், பொதுமக்களும் வலுவான கண்டனக் குரலை எழுப்பியதோடு, பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர், ஆன்லைன் சூதாட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மசோதாவை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதல்வர் இன்று (23.3.2023) தாக்கல் செய்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதில் தமிழ்நாடு அரசு உறுதியாக நின்று செயல்படுவது வரவேற்கத்தக்கது.
எனவே, ஆளுநர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி இனியும் காலம் தாழ்த்தாமல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. தேசிய அளவில் இத்தகைய சட்டம் கொண்டுவர அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசை வற்புறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என அதில் கூறியுள்ளார்.