சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீதான விவாதத்தில் ஓபிஎஸ் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று (மார்ச் 23) சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து பேரவையில் பேசினார். இதன் மீது, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏ வேல்முருகன், கொமதேக எம்எல்ஏ ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, சிபிஎம் எம்.எல்.ஏ., நாகை மாலி, பாஜக குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக குழுத்தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் ஆகியோர் பேசினர்.
இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பேச அனுமதி அளித்ததற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “ஓபிஎஸ் பேசுவது குழப்பத்தை உண்டு செய்வது போல் உள்ளது. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ, அதுதான் எதிர்க்கட்சி” என்று தெரிவித்தார்.
இதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, “ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்றோ, அதிமுக உறுப்பினர் என்றோ நான் சொல்லவில்லை. முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் அவர் கோரும் போது ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கினோம்” என்று தெரிவித்தார்.
ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், “பிரதான எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தான், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. மூத்த உறுப்பினர், முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில்தான் ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கினேன்.” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.