இந்தியாவிலிருந்து 16.80 கோடி பேரின் தகவல்கள் விற்பனை! எப்படி திருடப்பட்டது? பகீர் பின்னணி

இந்தியாவிலிருந்து 16.80 கோடி பேரின் ரகசிய தகவல்களைத் திருடி விற்பனை செய்திருக்கும் கும்பல் பற்றிய தகவல் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று கை விரல்களுக்குள்ளேயே விஞ்ஞானம் விரிவடைந்திருந்தாலும் அதனால் ஏராளமான ஆபத்துகளும் வளர்ந்திருக்கின்றன. நாம் அடிக்கடி பயன்படுத்தும் செல்போன், கணினி, மடிக்கணினி உள்ளிட்ட சாதனங்களில்தான் நம்முடைய பல்வேறு ரகசியமான தகவல்களைச் சேமித்து வைக்கிறோம். குறிப்பாக வங்கி சம்பந்தப்பட்ட கடவுச்சொல்களையும் சேமித்து வைக்கிறோம். ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து நம்மில் பலர் சிந்திப்பதில்லை. இதனால், உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன.
image
இந்த நிலையில், இந்தியாவிலிருந்து சுமார் 16.80 கோடி பேரின் தகவல்களை 6 பேர் கொண்ட கும்பல் திருடி விற்பனை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய தகவல் மோசடி எனப் போலீசாரால் கூறப்படுகிறது. இதுகுறித்து சைபராபாத் காவல் துறை ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “இதில் வங்கி வாடிக்கையாளர்கள், முகநூல் பயனர்கள், ஐ.டி. ஊழியர்கள், அரசு ஊழியர்கள், நீட் தேர்வு மாணவர்கள், ராணுவ வீரர்கள், விமானிகள் ஆகியோரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
அதன்படி 1.10 கோடி வங்கி வாடிக்கையாளர்கள், 75 முகநூல் பயனர்கள், 1.2 கோடி வாட்ஸ்அப் பயனர்கள், 35 ஆயிரம் டெல்லி அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 2.50 லட்சம் ராணுவ வீரர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தக் கும்பல், கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் பற்றிய தகவல்களையும் திருடியது அம்பலமாகியுள்ளது.
image
அந்தக் கும்பல், வாடிக்கையாளர் பெயர், பணி, விவரம், ஆதார் எண், பான் கார்டு எண், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விவரங்கள், முகவரி, செல்பேசி எண்கள், வங்கியில் உள்ள இதர விவரங்கள் என அவர்களுடைய பல்வேறு தகவல்களையும் திருடி 140 வகைகளாகப் பிரித்து பல கோடிக்கு விற்பனை செய்துள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த குமார் நிதீஷ் பூஷன், குமாரி பூஜாபால், சுஷீல் தாமர், அதுல் பிரதாப் சிங், முஷ்கன் ஹாசன், சந்தீப் பால் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான குமார் நிதீஷ் பூஷன் உத்தரபிரதேசம் நொய்டாவில் கால் செண்டரை நிறுவி, கிரெட் கார்டுகளின் தகவல்களைச் சேகரித்துள்ளார். இதில் சந்தீப் பால் என்பவர், Global Data Arts என்ற பெயரில் இணையக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களிடம் தகவல்களை விற்பனை செய்துள்ளார். அதுபோல் முஷ்கன் ஹாசனும் தரவுகளை விற்பனை செய்துள்ளார். இக்கும்பலை சேர்ந்தோர் டேட்டா மார்ட் இன்போடெக், குளோபல் டேட்டா ஆர்ட்ஸ் மற்றும் எம்எஸ் டிஜிட்டல் க்ரோ ஆகிய மூன்று பதிவு செய்யப்பட்ட பெயர்களிலும், பதிவு செய்யப்படாத சில பெயர்கள் மூலமாகவும் இந்த தகவல்களை விற்றிருக்கின்றனர். இக்கும்பலிடமிருந்து 12 செல்போன்கள், 3 லேப்டாப்கள், 2 சிபியூகள் மற்றும் தனிநபர்களின் 138 வகையான தரவுகளின் பட்டியல் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
image
இதுபோன்ற தரவுகள் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரித்திருக்கும் காவல் துறையினர், “இணையதளங்களில் சேவைகளைப் பெறுவதற்காக மக்கள் தங்களுடைய தரவுகளைத் தரும்போதுதான் அதை இணையதளவாசிகள் ரகசியமாகத் திருடி விடுகின்றனர். இதனால் சேவைபெறும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.