இந்தியாவில் விரைவில் 6ஜி தொலை தொடர்பு சேவை: பிரதமர் மோடி அறிவிப்பு!!

டெல்லி: இந்தியாவில் 6ஜி தொலை தொடர்பு சேவைகளுக்கான சோதனை தொடங்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 2030க்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

6ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாட்டு சோதனை மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் 6ஜி சேவை தொடர்பாக செயல்திட்டங்களை உருவாக்க கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில், பல்வேறு துறை அமைச்சகங்கள், துறைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி சார்ந்த குழுக்கள், தரநிர்ணய அமைப்புகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்கள், தொழில் துறையினர் உள்ளிட்டோர் இணைந்து 6ஜி தொழில்நுட்ப புத்தாக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று, பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டு, 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சோதனை அமைப்பையும், சர்வதேச தொலைத்தொடர்பு பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  அப்போது பேசிய பிரதமர் மோடி, “5ஜி தொழில்நுபட்பத்தை மிக வேகமாக அறிமுகப்படுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட 120 நாட்களிலேயே 125 நகரங்களுக்கு இந்த சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

4ஜி தொழில்நுட்பத்துக்கு முன் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாடாக மட்டுமே இருந்த இந்தியா, தற்போது தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது. வரும் நாட்களில் இந்தியா 100 5ஜி ஆய்வகங்களை அமைக்கும்.

இந்த ஆய்வகங்கள் இந்தியாவின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப 5ஜி பயன்பாடுகளை உருவாக்க உதவும். நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் இணைய சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 5ஜி அறிமுகமான சில நாட்களிலேயே 6ஜி தொழில்நுட்பம் குறித்து நாங்கள் பேசி வருகிறோம். இது இந்தியாவின் நம்பிக்கையை காட்டுகிறது” இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் 6ஜி தொலை தொடர்பு சேவைகளுக்கான சோதனை தொடங்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 2030க்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.