”இனி ஒரு உயிர் பறிக்கப்படக் கூடாது” – மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா

தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில், ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் மசோதா தொடர்பான நீண்ட விளக்கத்தையும் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு முதலமைச்சர் பேசினார்.
தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டதாகவும், மனித உயிர்களை பழிவாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒடுக்குவதில், இதயம் உள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்காது, இருக்கவும் கூடாது என்றும், ஆன்லைன் சூதாட்ட அநியாயம் தொடராமல் இருக்க, இந்த சட்ட முன்வடிவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
image
அதுமட்டுமின்றி, இனி ஒரு உயிர் பறிக்கப்படக் கூடாது, அநியாயம் தொடரக்கூடாது என கேட்டுக்கொண்ட அவர், அனைத்து உறுப்பினர்களும் இந்த சட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு பேசினார்.
இதைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், திமுக சார்பில் துரைமுருகன், பாமக சார்பில் ஜி,கே,மணி, விசிக சார்பில் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை வரவேற்று பேசினார்கள்.
image
இதையடுத்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா ஒருமனதாக நிறைவேறியது. தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், இந்த சட்ட மசோதா மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.