இவ்வருட வெசாக் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு

  • “புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகை” மே 05,06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கங்காராம விகாரை , ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலக வளாகங்களில் இடம்பெறும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக இவ்வருட வெசாக் பண்டிகையை தேசிய மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் வெகு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

“புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகை” தொடர்பில் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பூர்வாங்க கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹுனுபிட்டிய, கங்காராம விகாராதிகாரி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் கலாநிதி வண. பல்லேகம ரதனசார தேரர் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதோடு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான .சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டனர்.

“புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகை” 2023 மே மாதம் 05, 06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் கொழும்பில் உள்ள கங்காராம விகாரை, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

தேசிய வெசாக் வலயமாக பெயரிடப்பட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார்.

மே மாதம் 05 ஆம் திகதி இடம்பெறும் வெசாக் பௌர்ணமி தினத்தன்று, கங்காராம விகாரையில் சில் பெறும் சம்பிரதாயத்துடன் ஆரம்பித்து, வெசாக் வலயக் கொடிகள், பதாதைகள், வெசாக் கூண்டுகள் மற்றும் மின்விளக்கு அலங்காரங்கள், மலர் பெரஹரா நடத்துதல், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பௌத்த கீதம் இசைத்தல், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் கங்காராம விகாரையின் பிரதான மேடைக்கு அருகாமையில் நடைபெற இருப்பதோடு, கங்காராம விகாரைக்கு அருகாமையிலும், ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகாமையிலும் வெசாக் அன்னதான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நல்ல நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்படும் இவ்வருட “புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகை” ஒரு முன்மாதிரியான வெசாக் பண்டிகையாக இருக்கும் என்று வண. கலாநிதி கிரிந்தே கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார்.

மேலும், வெசாக் பண்டிகையானது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிறந்த வாய்ப்பாக உள்ளது என்றும் குறிப்பிட்ட தேரர், நாடு பொருளாதார ரீதியில் வலுப்பெற்று வரும் இக்காலத்தில் நேர்மறையாக சிந்தித்து நல்ல பிரவேசமொன்றைப் பெறவும், மக்களின் ஆன்மீக மனநிலையை போசிக்கவும் இது வழிவகுக்கும் என்றும் தேரர் தெரிவித்தார்.

“புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை” வெற்றியடையச் செய்வதற்கு அரச துறை மற்றும் தனியார் துறையினர் அனைவரினதும் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.

அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவுத் தலைவர்கள் மற்றும் அனுசரணை எதிர்பார்த்துள்ள தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.