திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, உடல்நலமின்றி இறந்த மனைவிக்கு ரூ.15 லட்சத்தில் கோயில் கட்டி சிலை அமைத்து கணவர் வழிபடுவது பொதுமக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. திருப்பத்தூர் அடுத்த மான்கானூர் தக்டிவட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(60), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ஈஸ்வரி(55). இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகளாகிறது. 3 மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு ஈஸ்வரி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் சுப்பிரமணி வேதனை அடைந்தார்.
இதனால் மனைவிக்கு கோயில் கட்ட முடிவு செய்தார். அதன்படி தனக்கு சொந்தமான 15 சென்ட் இடத்தில் ரூ.15 லட்சம் செலவில் கோயில் கட்டி, அதில் 6 அடி உயரத்துக்கு ஈஸ்வரியின் உருவ சிலையை அமைத்தார். அதில் மனைவியின் படத்தையும் வைத்துள்ளார். மேலும் மனைவியை தெய்வமாக நினைத்து வழிபட்டு வருகிறார். வரும் 31ம் தேதி முதலாம் ஆண்டு நினைவு நாளை கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார். இறந்த மனைவிக்கு கணவர் கட்டியுள்ள கோயிலை பார்த்து அப்பகுதியினர் பார்த்து நெகிழ்ந்துள்ளனர்.