ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் – தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி,

சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளில் அந்த மாநிலங்களின் மொழிகளை வழக்காடு மொழியாக அறிவிப்பது குறித்து மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் பரிந்துரை வந்திருக்கிறதா, அப்படி பரிந்துரை வந்திருந்தால் மத்திய அரசு அதன் மீது எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் உசேன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, அரசியல் சாசன சட்டம் 348-வது பிரிவு மாநில கவர்னர்கள், ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரில் ஐகோர்ட்டுகளில் இந்தி அல்லது இதர பிராந்திய மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் அதே சமயம் 1965 ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, இத்தகைய பரிந்துரைகளின் மீது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் கருத்துக்களை கேட்பது கட்டாயம் என்பது தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளிடமிருந்து அந்தந்த மாநில ஐகோர்ட்டுகளில் தங்கள் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக அறிவிப்பது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை வந்திருந்தது எனவும் இந்த பரிந்துரை குறித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் கருத்துக்களை கேட்டபோது, இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டின் முழுமையான அமர்வு முடிவு செய்து இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

ஆனால் தமிழக அரசு மட்டும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தன்னுடைய முடிவை மறு ஆய்வு செய்யுமாறும் தமிழக சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கும்படியும் மீண்டும் ஒரு பரிந்துரை வழங்கியது என்றும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் கருத்து கேட்டபோது, இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டின் முழுமையான அமர்வு முடிவு செய்து இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதிலளித்திருக்கிறார் என்று மத்திய சட்டத்துறை மந்திரி தெரிவித்திருக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.