குளத்தூர்: சிப்பிகுளம், கீழவைப்பார் கடல் பகுதியில் மீன்பாடுகள் மந்தமாக இருந்தது. இதனால் ஒரு கூடை சாலை மீன் ரூ.800க்கு விற்பனையானது. குளத்தூர் அருகே உள்ள சிப்பிகுளம், கீழவைப்பார் கடல் பகுதியில் நிலவு வாரம் முடிந்து கடந்த சில நாட்களாக கச்சான் காற்று வீசி வருகிறது. காற்றின் வீச்சு அமைதியாக இருப்பதால் மீன்பாடுகளும் மந்தமாகவே உள்ளது. சாலை மீன் வலை, முறல் வலை என இரு பிரிவாக வலைகள் கொண்டு சென்று மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள், கடந்த சில நாட்களாக மீன்பாடுகள் என்பது படுமோசமாக உள்ளதாக கூறினர்.
சாலை மீன் வலை விரிக்கின்ற மீனவர்கள் வலையில் பரவலாக மீன்பாடுகள் இருந்தாலும் முறல் வலையில் மீன்கள் இல்லாமல் பெரும்பாலான மீனவர்கள் வெறும் வலையுடனே கரை திரும்பியுள்ளனர். மேலும் குறைந்த அளவிலான மீன்கள் வரத்திருந்த போதிலும் ஏலக் கூடத்தில் மீன்களுக்கான எதிர்பார்த்த விலை போகாததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர். இதில் 12 கிலோ எடை கொண்ட ஒரு கூடை சாலை மீன் ரூ.700ல் இருந்து ரூ.800 வரை ஏலம் போனது. குறைவாக வரத்து காணப்பட்ட ஊளி மீன் கிலோ ரூ.300ல் இருந்து ரூ.450 வரை ஏலம் போனது.
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: கடந்த சில வாரங்களாகவே மீன்பாடுகள் வரத்து மந்தமாகத்தான் உள்ளது. தற்போது வாடை காற்று குறைந்து கச்சான் காற்றுதான் வீசுகிறது. அதுவும் அமைதியாகவே உள்ளது. இதனால் கடல் குளம்போல் காட்சியளிப்பதால் மீன்பாடுகள் குறைவாகத்தான் காணப்படுகிறது. சில நாட்களில் வாடை காற்று வீச துவங்கியதும் மீன்பாடுகள் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்த்து உள்ளோம். பின்னர் வரும் மீன்பாடுகளின் வரத்தை பொருத்து மீன்கள் விலையில் மாற்றம் ஏற்படும், என்றனர்.