ஒரே ஒரு மெசேஜ் தான், 7 லட்சம் அபேஸ்: மும்பையில் மோசடி மன்னர்கள் கைவரிசை

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்திய பெண்ணுக்கு வங்கி கணக்கில் இருந்து 7 லட்சம் ரூபாய் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், நமக்கு பல வழிகளில் உதவும் தொழில்நுட்பத்தில் உள்ள விபரீதமான பக்கவிளைவுகளை மீண்டும் ஒரு முறை தோலுறித்துக் காட்டியுள்ளது. 

மும்பை அந்தேறி பகுதியை சேர்ந்த 65 வயதான பெண்ணின் கணவரது செல்போன் எண்ணுக்கு மின்சார கட்டணம் செலுத்தும் படி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ‘நீங்கள் மின் கட்டணம் செலுத்த தவறினால் உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும்’ என்று  குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் பணத்தை ஆன்லைனில் செலுத்துவதற்காக ஒரு செல்போன் எண்ணும் ஒரு லிங்க்கும் கொடுக்கப்பட்டிருந்தது .

அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட அந்தப் பெண் குறுஞ்செய்தி பற்றி கேட்கவே  எதிர் முனையில் பேசிய நபரோ தான் அதானி எலக்ட்ரிசிட்டியில் வேலை பார்ப்பதாகவும், தொடர்ந்து ஆப் ஒன்றை டவுன்லோட் செய்தால் தாங்கள் மின்சார கட்டணம் செலுத்த உதவ முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அந்த பெண் அந்த ஆப்பை டவுன்லோட் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆப்ஷன்களுக்கும் ஓகே கொடுத்துள்ளார்.

அடுத்த ஒரு சில வினாடிகளில் அந்தப் பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து மூன்று முறை பணம் எடுக்கப்பட்டு இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. முதலில் 4,62,959 ரூபாயும், இரண்டாவதாக 1,39,900 ரூபாயும் மூன்றாவதாக 89,000 ரூபாயும் என மொத்தம்  6,91,859 ரூபாய் மாயமானதாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அந்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த மோசடி ஆசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதே பாதையில் சில சைபர் திருட்டு வழக்குகள் மும்பை உள்பட நாட்டின் பிற பகுதிகளில் பதிவாகி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்

நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கும் டெக்னாலஜிகளில் இது போன்ற சைபர் திருடர்களும் தங்களது டெக்னிக்குகளை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். இதனால் பொதுவாகவே தங்களுக்கு வரக்கூடிய குறுஞ்செய்திகளில் இருக்கும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸாரும் வங்கியும் பொதுமக்களுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றனர். மேலும் தொடர்ந்து இது போன்ற குறுஞ்செய்திகள் வரும்போது அதனை பிளாக் செய்து பின் வங்கிகளுக்கு இது பற்றி தெரியப்படுத்துவதே ஆகச் சிறந்ததாக இருக்கும் என்கிறார்கள் சைபர் கிரைம் வல்லுனர்கள்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.